HMPV வைரஸ் தொற்று: தமிழக அரசின் அறிவுறுத்தல் என்ன?

சீனாவில் தற்போது எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில், சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாகவும், பலருக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனாவில் குளிர் காலத்தில் எப்போதும் சுவாசப் பாதை தொற்று நோய்கள் அதிகரிப்பது இயல்பே. சீன அரசு குடிமக்கள், சுற்றுலா பயணிகளின் உடல் நலனின் எப்போதுமே அக்கறை கொண்டுள்ளது. சீனாவில் தொற்று நோய் பரவல் ஏதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் HMPV வைரஸ்

இந்த நிலையில், HMPV வைரஸ் இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் ஐந்து பேருக்கு இந்த வைரஸ் தொற்று என்பது பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.பெங்களூரில் 8 மாதக் குழந்தைக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று நோய் இந்தியாவில் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக மருத்துவத்துறையின் அறிவுறுத்தல்

இந்த நிலையில், HMPV வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”HMPV வகை தொற்று ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது தான்; புதிதாக உருமாறிய தொற்று எதுவும் தற்போது பரவவில்லை. HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை. தொற்றுநோய் தடுப்பு ஆய்வகங்கள் 36 உள்ளது. மேலும் அவற்றில் பரிசோதனை செய்ய பிசிஆர் சோதனை கருவிகளும் உள்ளது. மாநில ஆய்வு மையத்தில் புதியது போன்ற எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை.

தற்போது தமிழகத்தில் இன்புளுவன்சா தொற்றுதான் அதிக அளவில் உள்ளது. இதுவும் சாதாரண பருவ கால காய்ச்சலே. அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுபவர்களை கண்காணித்ததில் இது போன்ற பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பெரிய அளவில் அனுமதிக்கப்படவில்லை. கட்டுப்படுத்தும் அளவிலேயே பருவ கால காய்ச்சல் பாதிப்புகள் தமிழகத்தில் உள்ளது.

ஒருவருக்கு இருமல், தும்மல் உள்ளிட்டவைகள் வந்தால் வாய் மற்றும் மூக்கு உள்ளிட்டவைகளை மறைத்து, அதற்குப் பிறகு தும்மல் வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கூட்ட நெரிசல் இருக்கக்கூடிய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்திற்கு இருமல், தும்மல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இது தொடர்பாக தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» kış saatine neden alışamıyoruz ?. Özel yat kiralama. 000 dkk pr.