சிந்துவெளி நாகரிகம்: நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத புதிர்!

சிந்து சமவெளி நாகரிகம் புதினமா அல்லது புதிரா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறந்த கட்டடக் கலை, நகர நாகரிகம், சிறப்பான மண்பாண்டங்கள் உள்ளிட்டவை அதை புதினமாகக் காட்டுகிறது. அதேநேரத்தில், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்து முறையை இன்னமும் முழுமையாக சரிவர படிக்க முடியாத காரணத்தால், அது இன்றைக்கும் புதிராகவும் இருக்கிறது.

சிந்துவெளி நாகரிகம் முதன் முதலில் 1924 ஆம் ஆண்டு செப். 20 ஆம் தேதி உலகுக்கு அறிவிக்கப்பட்டது. ‘தி.இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ்’ என்ற இதழில் இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் அதை அறிவித்தார் இது, இந்திய துணைக்கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கி, நம்முடைய கடந்த காலத்தை பற்றிய புரிதலையே மாற்றி அமைத்தது. ஆரியமும் சம்ஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்று பலர் கற்பனை வரலாற்றை சொல்லிக் கொண்டிருந்தனர். அதை மாற்றியது ஜான் ஹீபர்ட் மார்ஷலின் ஆய்வு. சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது, அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என்று அவர் நூறாண்டுகளுக்கு முன்பு சொன்ன குரல் இன்றைக்கு வலுப்பெற்றிருக்கிறது.

சிந்துவெளியில் ‘காளைகள்’ தான் இருந்தன. இது திராவிடச் சின்னம். சிந்துவெளியில் இருந்து, இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில், ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்று வருகிறது. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த ஒரு முத்திரையில் காளை உருவமும், அதை அடக்க முயலும் வீரரை அந்த காளை தூக்கி வீசுவதும் இருக்கிறது.

சிந்துவெளி நாகரிகத்தில் வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்ட முத்திரைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகளையும், தமிழ்நாட்டில் அகழாய்வுகளில் கிடைக்கும் குறியீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 60 சதவீதம் குறியீடுகள் ஒரே தன்மையிலான குறியீடுகளாக காணப்படுகின்றன.

அதுபோல, சிந்துவெளியில் பொதுமக்களால் பயன்படுத்தப் பட்ட மண்பாண்டங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும், தமிழ்நாட்டில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும், அதிகபட்சமாக 90 சதவீதம் ஒரே தன்மை கொண்டவையாக காணப்படுகிறது என்று நம்முடைய தொல்லியல் ஆய்வாளர்கள் இப்போது நிறுவியிருக்கிறார்கள். செழித்து வளர்ந்த சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை.

நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளி புதிர் பற்றி, உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

புதிரை தீர்ப்பவர்களுக்கு ரூ. 8.57 கோடி பரிசு

இந்த நிலையில் தான், சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு 3 நாள் கருத்தரங்கு சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில் நேற்று தொடங்கியது. இதனைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் இது தொடர்பான மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிந்துவெளி புதிரைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழி வகையை, தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 8.57 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

மேலும், “சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில், தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஓர் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி வழங்கப்படும். தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

devamını oku ». Best selling private charter yachts & most liked sail boats*. Er min hest syg ? hesteinternatet.