பெ.சண்முகம்: தமிழக சிபிஎம் கட்சியை வழிநடத்தப் போகும் முதல் தலித் தலைவர்; ‘வாச்சாத்தி’ போராளி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில் நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில், அக்கட்சியின் புதிய மாநில செயலாளராக அதன் மத்திய குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவருமான பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் இந்த சண்முகம்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ.சண்முகம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுபவர். விவசாயிகளின் பிரச்னைகளை முன்னெடுப்பவர். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் தலைவர் இவர்தான்.

திருச்சி, லால்குடியில் உள்ள பெருவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெ.சண்முகம், மாணவப் பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டவர் ஆவார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான இவர் சமூக நீதி இயக்கங்களில் இவரது குரல் ஓங்கி ஒலித்துள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தில் தொடங்கிய அரசியல்

மாணவராக இருந்தபோதே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர். 1979 ல் இந்திய மாணவர் சங்கத்தில் (SFI) சேர்ந்தார். இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் உள்ள ராமசாமி தமிழ் கல்லூரியில் பயின்றார். எஸ்எப்ஐ-யின் மாநிலத் தலைவராகவும், செயலாளராகவும் முக்கியப் பதவிகளை வகித்தார்.

சிபிஎம் கட்சியின் முழுநேர ஊழியரான பிறகு, 1992-ல் தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சண்முகம். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். 2020 முதல் அதன் மாநிலத் தலைவராக இருந்தார்.

பழங்குடியினருக்காக போராட்டம்

தலித் சமூகத்தில் பிறந்த சண்முகம், பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கான போராட்டங்களை முன்னின்று நடத்தியதோடு, அவர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராகவும் போராடினார். சமூகச் சான்றிதழ், வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் பழங்குடியின மக்களின் போராட்டங்களில் முன்னணியில் நின்று போராடினார். வரலாற்றுச் சிறப்புமிக்க வன உரிமைச் சட்டம் சாத்தியமாகியதன் பின்னணியில், இவரது போராட்டமும் , 2006 நவம்பர் 24 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பழங்குடியினரின் நில உரிமை போராட்டத்திலுள்ள நியாயத்தை எடுத்துரைத்ததும் குறிப்பிடத்தக்கது.

வாச்சாத்தி போராளி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். இந்த கிராமத்திற்குள், 1992 – ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி சந்தனக் கட்டைகளைத் தேடி நுழைந்த வனத்துறையினர், விவசாயி ஒருவரின் களத்தின் அருகே சில சந்தனக் கட்டைகளைக் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து வனத்துறையினர், காவலர்கள், வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய கூட்டுக் குழுவினர், ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் வேட்டையின் போது, கிராம மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 13 வயது சிறுமி உட்பட 18 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

காவல்துறையினர் நடத்திய இந்த அட்டூழியத்திற்கு எதிரான நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ததில் முக்கிய பங்காற்றியவர் பெ.சண்முகம். தமிழ்நாடு மலைவாழ் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு, தமிழக அரசின் அம்பேத்கர் விருதை முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து சண்முகம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This contact form is created using. sailing yachts & boats. Er min hest syg ? hesteinternatet.