நல்லகண்ணு 100: மகளுக்கு கவரிங் கடுக்கன்… அபூர்வ தலைவரின் அசாதாரண வாழ்க்கை!
செங்கொடி இயக்கத்தின் மகத்தான முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாள் இன்று. எளிமையும், அர்ப்பணிப்பும், எந்த சூழ்நிலையிலும் உறுதியாக நிற்கும் போராட்டக் குணமும், பொதுச் சேவையில் இன்றைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகவும் திகழ்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு.
ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் டிசம்பர் 26,1925 அன்று பிறந்தவர். பத்து உடன்பிறப்புகளில் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர். தீவிர வைஷ்ணவ பக்தரான அவரது தந்தை ராமசாமியால் கற்பிக்கப்பட்ட போதனைகளைக் கேட்டு வளர்ந்தவர், பின்னாட்களில் செங்கொடி இயக்க போராளியாக உருவெடுத்தது வியப்புக்குரிய விஷயம் தான்.
கல்லூரி படிப்பை கைவிட வைத்த போராட்டம்
நல்லகண்ணுவின் கல்வி பயணம் இப்போது கே. ஜி. எஸ் பள்ளி என்று அழைக்கப்படும் வைகுண்டம் கார்னசன் பள்ளியில் தொடங்கி திருநெல்வேலி இந்து கல்லூரியில் தொடர்ந்தது. தனது கல்லூரி ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஈடுபட்ட நிலையில், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் அவர் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு வழிவகுத்தது. 1943 வாக்கில், ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தழுவினார்.
மீசையைப் பொசுக்கிய போலீஸ்
ஆயுதப் போராட்டம்தான் புரட்சியைக் கொணர முடியும் என்று கருதிச் செயல்பட்ட நிலையில். 1949, டிசம்பர் 20 அன்று தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த நல்லகண்ணுவைக் கைதுசெய்தது போலீஸ். அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் போலீஸார் நடத்திய சித்திரவதையே நல்லகண்ணு தனது எஞ்சிய வாழ்நாள் முழுக்க மீசையைத் துறக்கக் காரணமானது. நல்லகண்ணு, தோழர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1951 முதல் 1956 வரையில் ஏழாண்டுகள் சிறையில் இருந்தார்.
ஆரம்ப காலத்தில் நல்லகண்ணு சைவ உணவு மட்டுமே உண்ட நிலையில், 1948-49 இல் தலைமறைவு வாழ்க்கை காலத்தில் மக்கள் கொடுக்கிற எந்த உணவாகினும் சாப்பிடத் தொடங்கினார். அப்படி தான் அசைவ உணவு உண்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார். மீன் அவருக்கு பிடித்தமான அசைவ உணவு.
தோழராக துணை நின்ற வாழ்க்கைத் துணை
1958 ஆம் ஆண்டில், நல்லகண்ணு சாதி ஒழிப்பு ஆர்வலர் அன்னச்சாமியின் மகள் ரஞ்சித்தத்தை மணந்தார். நெல்லையில் நடைபெற்ற அவர்களின் திருமணம், சமூக நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு நபர்களின் சங்கமத்தின் அடையாளம் என்றே கூறலாம். கட்சியின் லட்சியங்களை உணர்ந்து வளர்ந்த ரஞ்சிதம், நல்லகண்ணுவுக்கு ஒரு வாழ்க்கைத் துணையாக மட்டுமல்லாமல், அவரது அரசியல் பயணத்தில் ஒரு உறுதியான கூட்டாளியாகவும் துணை நின்றார். 2016 டிசம்பரில் ரஞ்சிதம் மறைந்தது நல்லகண்ணுவின் வாழ்க்கையில் பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும்.
சமூக நீதி போராளி
நாங்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச்செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் என்று நல்லகண்ணு நடத்திய போராட்டங்களின் வரலாறு நீளமானது.
1999 ஆம் ஆண்டில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடந்த கலவரங்களின்போது, நல்லகண்ணுவின் மாமனாரும் சாதி ஒழிப்புப் போராளியுமான அன்னச்சாமியும் அப்படி வெட்டிக்கொல்லப்பட்டார். நல்லகண்ணு உணர்ச்சிவசப்பட்டிருந்தால் கலவரம் மேலும் பெரிதாகியிருக்கும். ‘உள்ளூர்க்காரர்கள் செய்திருக்கவே மாட்டார்கள்’ என்று உறுதியாக நின்றார். மாமனார் மரணத்துக்கு அரசு கொடுத்த இழப்பீட்டையும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே கொடுத்துவிட்டார்.
சுற்றுச்சூழல் போராளி
தீவிர சுற்றுச்சூழல் ஆர்வலர் நல்லகண்ணுவின் செயல்பாடு தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை வாங்கினார். தூர்வாருதல் என்ற பெயரில் ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். தனக்கென பெரிதாக எந்தத் தேவையும் நோக்கமும் இல்லாத சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசு “தகைசால் தமிழர் விருது” அறிவித்து பாராட்டியது.
மகளுக்கு கவரிங் கடுக்கன்
தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். இவர் மீதான அன்பினாலும் அக்கறையினாலும் ஒரு பத்திரிகையாளர் அவருக்குக் கார் ஒன்றைப் பரிசாக அளித்தபோது அதனையும் கட்சிக்கே கொடுத்துவிட்டார்.
மகள் ஆண்டாளின் காது குத்து நிகழ்வின்போதுகூட வெறுங்கையுடன் நின்று, அப்புறம் நண்பர் ஆ.சிவசுப்பிரமணியத்துடன் கடைக்குப் போய் ‘கவரிங்’ கடுக்கன் வாங்கிக்கொண்டு போன வாழ்க்கை நல்லகண்ணுவினுடையது. ஆனால், பணத்தை எப்போதுமே துச்சமாகத்தான் பார்ப்பார். அவரது 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு.
அரசியல் வாழ்க்கை
விவசாயத்தொழிலாளர் அமைப்பில் மாநில, தேசிய அளவில் பொறுப்பு வகித்த இவர், 1992 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 வரை 13ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தேர்தலிலும், 1999 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட போதிலும், நல்லகண்ணு ஒவ்வொரு முறையும் தோல்வியை எதிர்கொண்டார். ஆயினும்கூட, இந்த பின்னடைவுகள் பொது வாழ்க்கையில் அவரது அர்ப்பணிப்பை ஒருபோதும் தடுக்கவில்லை.
டெய்ல்பீஸ்
நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும் வகையில் ஶ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய அரசு மருத்துவமனைக் கட்டடத்திற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்” எனப் பெயரிடப்படும் எனத் தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.