5, 8 ஆம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறை ரத்து: தமிழகத்தில் யாருக்கு பாதிப்பு?

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை அமல்படுத்தப்பட்டது. இது மாணவர்களின், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தது.
இந்த நிலையில், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குள் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வி அடையும் பட்சத்தில், மீண்டும் அதே வகுப்பிலேயே தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பள்ளிகளுக்கு பொருந்தும்?
மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உள்பட மத்திய அரசால் நடத்தப்படும் 3000 பள்ளிகளுக்கும் பொருந்தும்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகளிலும் இந்த கட்டாய தேர்ச்சி முறை அமல்படுத்தப்படும். மத்திய அரசின் இந்த பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல. இந்த நிலையில், 5 அல்லது 8 ஆம் வகுப்பில் அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படாவிட்டால், அவர்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விடும் வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கல்வியாளர்கள் எதிர்ப்பு
கிராமங்களில் மாணவர்கள் கல்வி கற்பதை இது தடுத்து நிறுத்தும் முயற்சி என்றும், இதனால், பள்ளிகளில் டிராப் அவுட் எனப்படும் இடைநிறுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
” 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி கிடையாது என்று கூறுவது மாநில உரிமைகளை கை வைக்கும் நடைமுறையாகும். மாநிலங்கள் மீது மத்திய அரசு தனது முடிவுகளை திணிக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், நாடு முழுவதும் பெரும் பகுதியான பள்ளிகளை மாநில அரசுகள்தான் நடத்துகின்றன. அப்படி இருக்கும் போது தங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள்தான் முடிவு செய்யும். இதில் மத்திய அரசு தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
‘தமிழக பள்ளி தேர்ச்சி முறையில் மாற்றம் இல்லை’
அதே சமயம், தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை.தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும்” என அவர் அழுத்தந்திருத்தமாக தெரிவித்துள்ளார்.