ஃபெஞ்சல் புயல்:களத்துக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின்…நேரில் ஆய்வு!
ஃபெஞ்சல் புயல் சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள நிலையில், மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும். 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில்,சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 12% கூடுதலாக பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலினால் சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர் – மதுரவாயில் இடையே முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.தரைப்பாலம் மூழ்கியதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன. மேலும், சென்னையின் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, RBI சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் கரையை நெருங்கி வருவதையொட்டி சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக தொடர்பு கொண்டு அங்கு இருக்கக்கூடிய கள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீரேற்று நிலையத்திலும், ராயபுரம் உணவு தயாரிப்பு கூடத்திலும், வண்ணாரப்பேட்டையில் உள்ள கழிவு நீரகற்று நிலையத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
‘எந்த பிரச்னைகளையும் அரசு சமாளிக்கும்’
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், “தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு அதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.இன்று இரவு புயல் கரையை கடக்கும் என செய்தி வந்திருக்கிறது.
சென்னை மாநகராட்சி ஆணையர்,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்பு கொண்டு அங்கு இருக்கக்கூடிய கள நிலவரங்களை குறித்து கேட்டு அறிந்தோம்.நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் ஓரளவுக்கு அங்கு தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இன்று இரவு நிச்சயமாக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
சென்னையில் எங்கெங்கு தண்ணீர் தேங்குமோ, அங்கு முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது. அப்படியே பிரச்னைகள் இருந்தாலும், அதை சமாளித்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.