ஃபெஞ்சல் புயல், சென்னை மழை… முழு நிலவரம்!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் வேகம் அதிகரித்து, மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இன்று பிற்பகல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் நகரும் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இன்று இரவு 7 மணிக்கு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில், 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், அப்போது அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் அதி தீவிர கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.
குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், சிட்லபாக்கம், மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 5 மணி முதல் காற்றுடன் மிதமான மழை பெய்து வந்தது. இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கியது.
மழையால் பணிக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கத்திவாக்கம் -12 செ.மீ, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர் தலா 9 செ.மீ பொன்னேரி, மணலி, ஐஸ் அவுஸ், மத்திய சென்னையில் தலா 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ மழைபதிவாகி உள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்கலாம் எனத் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஐடி நிறுவனங்களுக்கு Work From Home
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது பணியாளர்களை இன்று வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அதன்படியே ஊழியர்கள் (Work From Home) பணிபுரிந்து வருகிறார்கள்.
ரயில் சேவையில் தடை இல்லை
அதே சமயம்,மழை காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் எந்த தடையுமில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புறநகர் மின்சார ரயில் சேவைகளும் தொடரும் நிலையில், இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட விமான நிலையம்
புயல் காரணமாக கனமழை கொட்டி வரும் நிலையில், சென்னை விமான நிலையம் மாலை 5 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து 2 மணிக்கு மேல் மதுரை, திருச்சி, சேலம் செல்லும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானங்களின் நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
புயல் எச்சரிக்கை காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.