‘கங்குவா’ பாதிப்பு: FDFS விமர்சனங்களுக்குத் தடை ஏற்புடையதா?
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்து அண்மையில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்த விமர்சனங்கள் பல சூர்யா மீதான முந்தைய தனிப்பட்ட வெறுப்பை காரணமாக வைத்து வெளிப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக ‘ஜெய்பீம்’ படம் தொடர்பான சில சர்ச்சைகள் எழுந்தன. அதேபோன்று கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என ஜோதிகா பேசியதை வைத்து, அவர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை அவமதித்துவிட்டதாக இந்து அமைப்புகள் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில், இரண்டரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன நிலையில், முதல் நாள் அன்றே அப்படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பலவகையான மீம்ஸ்களும் பதிவிடப்பட்டு, அப்படம் troll செய்யப்பட்டது. இதனால், படத்தின் வசூல் பாதிக்கப்பட்ட நிலையில், சூர்யா மீதான தனிப்பட்ட பழைய வன்மம் காரணமாகவே, வஞ்சம் தீர்க்கும் வகையில், திட்டமிட்டு இத்தகைய விமர்சனங்கள் பதிவிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், படம் அந்த அளவுக்கு மோசமில்லை என்றும், பார்க்கக்கூடிய அளவிலேயே இருப்பதாகவும் பல திரைப்பிரபலங்கள் மற்றும் சில விமர்சகர்களும் ஆதரவான கருத்துகளைத் தெரிவித்தனர்.
படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில ஒலி அதிகமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட காட்சிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் அந்த ஒலி அதிகம் வந்த பகுதி நீக்கப்படுவதாகவும் படக்குழு அறிவித்தது. இப்படி பல மாற்றங்களை செய்த போதிலும் படத்தின் வசூல் திருப்திகரமாக இல்லை.
‘Youtube சேனல்கள் விமர்சனத்தால் பாதிப்பு’
இந்த நிலையில், இதற்கு காரணம் FDFS Public Review என்ற பெயரில் சில Youtube சேனல்களைச் சேர்ந்தவர்கள் எடுத்துப் பதிவிடும் விமர்சனங்களே காரணம் எனக் குற்றம் சாட்டி உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு இத்தகைய விமர்சனங்கள் மூலம் பெருமளவில் பாதிப்பை யூட்யூப் சேனல்கள் ஏற்படுத்தியுள்ளன எனவும், அனைத்து திரையரங்கு வளாகத்திலும் முதல் காட்சி ரசிகர் பேட்டியை தடை செய்ய வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
தடை கோரும் தயாரிப்பாளர்கள் சங்கம்
அதே சமயம், திரையரங்குகளுக்கு வெளியே, திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல YouTube Channel-கள், எல்லை மீறி கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு, அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்து செல்வது மிகவும் கண்டிக்கதக்கது.
எந்த YouTube Channel-ம் பார்வையாளர்கள் ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்க கூடாது. Public Review/Public Talk என்கிற பெயரில் பார்வையாளர்களை திரைப்படங்கள் மீதும் அதில் சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் மனிதர்களாக மாற்றும் இந்த போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
‘கருத்துரிமைக்கு எதிரானது’
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த கோரிக்கை, திரைப்பட வருவாயைப் பாதுகாப்பதற்காக கருத்துரிமையை நசுக்குவதாக உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“ஏன் மகாராஜா, லப்பர் பந்து, அமரன் போன்ற படங்கள் எல்லாம் விமர்சனங்களால் பாதிக்கப்பட்டனவா? இந்தியன் 2 மற்றும் கங்குவா மோசமான மேக்கிங் காரணமாக எப்படியும் தோல்வியைத் தான் சந்திக்கும். விமர்சனங்களைக்.கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, நல்ல படங்களை எடுக்குமாறு இயக்குநர்களை தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுகொள்ள வேண்டும்” என சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
மேலும், திரையரங்க வளாகத்திற்குள் Youtube சேனலுக்கு தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் தயாரிப்பாளர்கள், திரையரங்கு வளாகத்தில் உள்ள தின்பண்டங்கள் விலை பற்றியும் பேச வேண்டும். விமர்சனங்களுக்கு வாய்பூட்டுப் போடுவதை விட நல்ல படங்களைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்” என்றும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
‘விஜய் படம் troll செய்யப்பட்டதே?‘
இந்த நிலையில், ‘கங்குவா’ troll செய்யப்பட்டதில் விஜய் ரசிகர்களுக்கும் பங்கு உண்டு என்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படும் நிலையில், ” லியோ, கோட் படங்கள் வெளியானபோது இதேபோன்று விமர்சனங்கள் எழுந்தன.
ஆனாலும் ‘கோட்’ படம் ப்ளாக்பஸ்டர் மூவி தான். அப்போது அமைதியாக இருந்தவர்கள் இப்போது மட்டும் வாய் திறப்பது ஏன்? தளபதி படம் வர்றப்ப எல்லாரும் ஒண்ணு சேர்ந்து அடிப்பாங்க… ஆனா ஒண்ணும் நடக்காது. இதே தளபதி ரசிகர்கள் திரும்ப அடிச்சா தாங்க மாட்டேங்குது” என விஜய் ரசிகர்கள் தரப்பில் பதிவிடப்பட்டு வருகின்றன.