‘தமிழகத்துக்கான நிதிப்பங்கீடு: மத்தியக் குழுவின் பாராட்டு மட்டுமே போதாது!’
மத்திய நிதி ஆணையக் குழு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதனடிப்படையில், 16 ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 12 பேர் குழு நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்தது. இந்தக் குழு, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சுகாதாரம், கல்வி, சமூக நலம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கான பல முக்கியமான திட்டங் களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாநில அரசுகள் தான் நிறைவேற்றி வருகின்றன.
ஆனால், அதற்கு மாறாக இந்த பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்றத் தேவையான வருவாயைப் பெருக்குவதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளன. அந்தவகையில், கடந்த 15 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தியதை நாங்கள் உளமாற பாராட்டுகிறோம். எனினும் இந்த பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் இடம்பெற்றிருக்கும் மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகிய வற்றை ஒன்றிய அரசு இக்கால கட்டத்தில் பெருமளவு உயர்த்தி யதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதுமட்டுமின்றி ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது. ஒருபுறம் ஒன்றிய அரசிட மிருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் ஒன்றியஅரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. எனவே, ஒன்றிய வரு வாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்” என்று வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்தையும் இக்குழு கேட்டறிந்தது
‘தமிழக அரசின் ‘மாஸ்டர் கிளாஸ்’அறிக்கை’
இந்த நிலையில், நிதிப்பங்கீடு குறித்து தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த அறிக்கையை ‘மாஸ்டர் கிளாஸ்’ எனப் பாராட்டிய நிதி ஆணையக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா, “ஆதாரப்பூர்வமான தரவுகளுடன் அனைத்தும் ஒருங்கிணைத்து அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மற்ற மாநிலங்களில் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வழங்கப்படும். ஆனால் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதி கோரிக்கைக்கான விளக்கங்கள், எதற்கு தேவைப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளனர். இதுவரை நிதிக்குழு ஆணையம் இந்தியாவில் 12 மாநிலங்களுக்கு சென்றுள்ளது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் ஏன் நிதியை அதிகரிக்க வேண்டும் என தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஆழ்ந்த ஆராய்ச்சி, தெளிவான பகுப்பாய்வுடன் கூடிய தமிழக அரசு தரப்பில் தலைச்சிறந்த தரவுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறினார்.
‘பாராட்டோடு நின்றுவிடக்கூடாது’
“எல்லாம் சரி தான்… வெறும் பாராட்டோடு நின்றுவிடாமல் தமிழகம் கோரிய உரிய நிதியை வழங்கினால் தான் இந்த பாராட்டுதலுக்கு அர்த்தம் உண்டு” என்கிறார்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கெடுத்த தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.
“இப்படி தான் கடந்த ஆண்டு தமிழக மழை வெள்ளத்தின்போது ஏற்பட்ட சேத நிலைமைகளை பார்வையிட வந்த மத்தியக் குழு, தமிழக அரசு சிறப்பான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பாராட்டிவிட்டுச் சென்றது.
ஆனால், தமிழகம் கேட்ட வெள்ள நிவாரண நிதி இன்னும் வந்தபாடில்லை. அதே கதை இதற்கும் ஆகிவிடக்கூடாது” என்கிறார்கள் திமுகவினர்.
மத்தியக் குழுவும் மத்திய அரசும் மனது வைக்குமா?