Carrom World Cup: தங்கம் வென்ற தமிழ் மகள்… காசிமாவின் எளிய பின்புலம்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் 17 வயதாகும் காசிமா, மகளிர் தனிநபர், மகளிர் இரட்டையர் மற்றும் மகளிர் குழு பிரிவு… என தான் பங்கேற்ற மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று, சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியில், காசிமாவை எதிர்த்து விளையாடியவர் பீகாரைச் சேர்ந்த ராஷ்மி குமாரி ஆவார். இவர் 12 முறை தேசிய அளவிலும், பல முறை சர்வதேச அளவிலும் சாம்பியன்ஷிப் வென்றவர் ஆவார்.
இந்த வெற்றியின் மூலம், உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் மிகக் குறைந்த வயதில் தங்கம் வென்ற பெருமைக்கு உரியவராகிறார் காசிமா.
காசிமா, சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை மெகபூப் பாஷா ஆட்டோ ஓட்டுநர். காசிமா, கேரம் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ள செரியன் நகரில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். எளிய குடும்பச் சூழ்நிலையிலும், மகளின் கனவை நிறைவேற்றும் வகையில், தந்தை பாஷா அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து வந்துள்ளார்.
கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வரும் காசிமா, மாநில மற்றும் தேசிய அளவில் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
வரும் 21 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து பதக்கத்தோடு வீராங்கனை காசிமா நாடு திரும்ப உள்ளார். தனது மகள் தங்கம் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து காசிமாவின் தந்தை அளித்துள்ள பேட்டியில், “வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் இது. ஒட்டுமொத்த இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
எளிய பின்புலம் கொண்ட காசிமாவின் வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளபோதிலும், வடசென்னை வாசிகள் இதனை கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக வடசென்னை என்றாலே ரவுடியிசம் என்பது போல் சினிமாவில் காட்டப்பட்ட காட்சிகளால், அப்பகுதிவாசிகள் மீது சிலர் கொண்டிருக்கும் எதிர்மறையான எண்ணத்துக்கு பாடம் புகட்டும் வகையில் காசிமாவின் இந்த வெற்றி அமைந்துள்ளது என்றால் அது, மிகையில்லை.
முன்னதாக காசிமாவுக்கு கடந்த ஜூலை மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1.50 லட்சம் ரூபாய் பண உதவி செய்திருந்தார்.
இந்த நிலையில், காசிமாவுக்கு தமிழக பாராட்டு தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது #CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே… எளியோரின் வெற்றியில்தான் #DravidianModel-இன் வெற்றி அடங்கியிருக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.