இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு : அநுரவுக்கு பெரும்பான்மை கிடைக்குமா?
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் 38 பேர் போட்டியிட்டனர். அதில் யாருக்கும் 51 % வாக்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் முதல் இரண்டு இடங்களை பிடித்த அநுர குமார திசநாயக்கே , சஜித் பிரேமதாசா ஆகிய இருவரில் யார் அதிபர் வேட்பாளர் என்பதை அறிய இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவில் 55% வாக்குகளை பெற்று அநுர குமார திசநாயக்கே அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டு, பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் இன்று நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கேவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனரா ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் மூலமாக நிரப்பப்படும்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1 கோடியே 17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 13,000 -க்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவையொட்டி, 90,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும்.
இந்த தேர்தலில் தமிழர்கள் பகுதியில் வெற்றபெறும் தமிழ் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முக்கிய கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ளன. அத்துடன் தமிழர் பகுதிகளில் பறிக்கப்பட்ட நிலம், மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் எனத் தேர்தல் பிரசாரத்தின்போது அதிபர் அநுர குமார திசநாயக்கே வாக்குறுதி அளித்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றிப் பெற வேண்டும். அதே நேரத்தில், 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் ‘சிறப்பு பெரும்பான்மை’ கிடைக்கும். சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே அதிபர் திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு சிறப்பு பெரும்பான்மை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மத்தியில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். அவர் நாட்டைவிட்டு தப்பீ ஓடிய நிலையில், அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்குப் பின்னர் நடக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது ஆகும்.
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை, சர்வதேச நாணயம் விதித்துள்ள இலக்குகளை அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், நிர்வாக ரீதியான முக்கிய முடிவுகளை எடுக்க இந்த தேர்தலில் அதிபர் திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு உரிய பெரும்பான்மை கிடைக்குமா என்பது வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் தெரிய வரும்.
ஒருவேளை, அநுர அணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்காவிட்டால், வேறு சில கட்சிகளுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைக்க முயல்வார்கள். அதுவும் கைகூடவில்லை என்றால், எதிரணியைச் சேர்ந்தவரே பிரதமராக அமர்த்தப்படுவார். அப்படி நடந்தால், அதிபருக்குப் பல சிக்கல்கள் உண்டாகும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தமிழர்களின் எதிர்பார்ப்பு
இலங்கையின் வாக்காளர்களிடம் பொதுவாக, பொருளாதார நிலை மேம்பட வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல, வேலை வாய்ப்பும் மிக முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.
குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் இந்த விவகாரம் தீவிரமாக எதிரொலிக்கிறது. தமிழ் வாக்காளர்களிடையே 13 வது சட்டத் திருத்தம் குறித்த எதிர்பார்ப்பு இருக்கிறது.