அமெரிக்க அதிபராகும் ட்ரம்ப்… இந்தியாவுக்கு சாதகமா பாதகமா?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டு, அதிக இடங்களைக் கைப்பற்றி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணிக்கைத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், தனது போட்டியாளரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று, 4 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் பதவியேற்கிறார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் இப்படியான வெற்றி கிடைத்தது இல்லை. இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” எனக் கூறி உள்ளார்.
“எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். அமெரிக்கா இனி குணமாகும். அமெரிக்காவின் எல்லைப் பிரச்னைகள் சரிசெய்யப்படும். அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் கனவும் மெய்ப்படும். போர்களைத் தொடங்க மாட்டேன்; நிறுத்துவேன். அதே சமயம், நமக்கு வலிமையான, அதிகாரமிக்க ராணுவம் தேவை” என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்பின் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவுக்கு பாதிப்பா?
இந்த நிலையில் ட்ரம்பின் வெற்றியால், அமெரிக்காவுடனான இந்தியாவின் எதிர்கால உறவு புதிய திசையில் செல்லக்கூடும் என்கிறார்கள் அயலுறவு வல்லுநர்கள். அதே சமயம் ட்ரம்பின் வெற்றி, இந்தியா மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு, அது தொடர்பான கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ட்ரம்ப் ஏற்கெனவே அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்திய பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டினார். அதே சமயம், இந்தியர்களுக்கான எச்-1பி (H-1B) விசா வழங்குவதிலும், இந்தியா உடனான வர்த்தகம் தொடர்பான வரி விதிப்பிலும் கெடுபிடி காட்டினார்.
அந்த வகையில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளின் தாக்கம் இந்தியாவின் வர்த்தகம், பங்குச் சந்தை மற்றும் எச்-1பி விசா விதிகள் போன்றவற்றில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் இந்திய வல்லுநர்கள்.
எந்தெந்த துறையில் பாதிப்பு?
ட்ரம்ப் நிர்வாகம், பிற நாட்டு வர்த்தக மற்றும் தொழில்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, அமெரிக்காவை மையமாகக் கொண்ட ( US-centric) வர்த்தகக் கொள்கைகளை முன்னெடுக்கலாம். இதனால், இந்தியா வர்த்தக தடைகளை எதிர்கொள்ள நேரிடலாம் அல்லது அதிக வரி விதிப்புகளை எதிர்கொள்ளலாம். இதனால், கணிசமான அமெரிக்க சந்தை ஏற்றுமதிகளைக் கொண்ட ஐடி, மருந்து துறைகள் மற்றும் ஜவுளி போன்ற முக்கிய இந்தியத் துறைகள் பாதிக்கப்படலாம்.
சமநிலையான வர்த்தகத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், ட்ரம்பின் அணுகுமுறை, அந்த நாட்டுடனான வர்த்தக உத்திகளை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு இந்தியாவைத் தள்ள வைக்கலாம். இருப்பினும், இது ஒரு வகையில் இந்தியாவை, அதற்குரிய பிற சாத்தியமான வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்க வைக்க உதவும்.
இருப்பினும் “டொனால்ட் ட்ரம்ப் தனது பல்வேறு தேர்தல் பிரசார கூட்டங்களின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது நல்ல நண்பர் என்று குறிப்பிட்டுள்ளதால், இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கலாம்” என்று கூறுகிறார் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான சிறப்பு மையத்தின் இணை பேராசிரியர் டாக்டர் அமித் சிங்.
சாதகம் என்ன?
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான நோமுராவின் செப்டம்பர் அறிக்கையில், ட்ரம்ப் அமெரிக்க அதிபரானால் அமெரிக்க பொருளாதாரம், புவிசார் அரசியல், நிதிச் சந்தைகள் மற்றும் உலகளாவிய நிலப்பரப்பு ஆகியவற்றில் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அதில், “வர்த்தகம் மற்றும் டாலர் மீது ட்ரம்புக்கு கடுமையான நிலைப்பாடு இருந்தபோதிலும், ட்ரம்ப் இந்தியாவுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனாலும், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் ஏற்பட்ட உராய்வு நிலைக்கு இரண்டு ஆதாரங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. முதலாவதாக, அமெரிக்காவுடனான இந்தியாவின் உபரி வர்த்தகம், ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். இரண்டாவதாக, ட்ரம்ப் நிர்வாகம் தங்கள் நாட்டு நாணயத்தை செயற்கையாக மதிப்பிழக்கச் செய்வதாகக் கருதப்படும் வர்த்தக பங்காளிகளுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளை செயல்படுத்தக் கூடும்.
எவ்வாறாயினும், இந்த குறுகிய கால இடையூறுகள் அமெரிக்காவின் “சீனா பிளஸ் ஒன்” உத்தி காரணமாக குறைக்கப்படலாம் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. “சீனா பிளஸ் ஒன்” என்பது விநியோகச் சங்கிலிகளை சீனாவிலிருந்து இந்தியா போன்ற மிகவும் சாதகமான நாடுகளுக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும். ட்ரம்ப் ஆட்சியின் கீழ் இந்த கொள்கை வேகம் பெறலாம் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தங்கம் விலை, பங்குச் சந்தை
“ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும்போது, அது தங்கத்தின் மீதான விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதன் விலை உயரும். மேலும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்த முயற்சிக்கலாம். அதே சமயம், இதனால் கச்சா எண்ணெய்யின் விலை குறையலாம்” என ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி தலைவர் சமீர் நரங் கூறி உள்ளார்.
ட்ரம்பின் இறுக்கமான வர்த்தகக் கட்டுப்பாடுகளுடன் கூடிய கொள்கை, அமெரிக்காவின் வளர்ச்சி வலுவாக இருப்பதை உறுதிசெய்யும். இதன் விளைவாக, அமெரிக்க பங்குச் சந்தை உலகின் பிற பகுதிகளை விஞ்சி நிற்கும் என்றும் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எச்-1பி விசா விதிகள்
ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தின்போது H-1B விசா திட்டத்தில், அதன் தகுதி அளவுகோல்களைக் குறைத்தல் மற்றும் விண்ணப்பங்களின் ஆய்வுகளை அதிகரிப்பதன் மூலம் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில், அமெரிக்கத் தொழிலாளர்களை இடமாற்றம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, H-1B வைத்திருப்பவர்களுக்கான அதிக ஊதியத் தேவைகள் போன்ற மேலும் இறுக்கமான கெடுபிடிகள் கொண்டுவரப்படலாம். அது மட்டுமல்லாது, H-1B விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம். மேலும், உயர் கல்வியில் மேம்பட்ட நிலை அல்லது சிறப்புத் திறன்களைக் கொண்டவர்களுக்கு சாதகமாக H-1B விசா விதிகள் மாற்றி அமைக்கப்படலாம் என்றும் அயலுறவு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பார்க்கலாம்… ட்ரம்ப் என்ன செய்யப்போகிறார் என்று!