தெலுங்கு மக்களுக்கு எதிரான பேச்சு… மன்னிப்புக் கோரினார் கஸ்தூரி!
பிராமண சமூகத்தினர் மீது தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எனவே அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பிராமணர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரியும், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், கடந்த 3 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், நடிகை கஸ்தூரி, பிராமணர் சமூகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சில கருத்துகளைப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.
இதற்கு நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் அனைவரையும் அவமதித்து விட்டதாகப் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
ஆனால், “தெலுங்கர்கள் குறித்து எனது பேச்சு தவறாக திரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள். பிராமணர்களை வந்தேறிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன். என் மாமியார் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசுபவர்கள்தான்” என கஸ்தூரி நேற்று பத்திரிகையாளர்களைக் கூட்டி விளக்கம் அளித்தார்.
ஆனால், அவர் என்ன பேசினார் என்பது வீடியோவாக இருப்பதால், அவரது விளக்கம் எடுபடவில்லை. இதனால், கண்டனங்கள் தொடர்ந்தன.
இந்த நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தான் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
அதில்,” இன்று எனது மிகவும் மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்களுக்கும் நான் தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் தாக்கங்களை பொறுமையாக கூறி விளக்கினார். ‘பிராமணர் அல்லாதார்’.
நான் எப்போதுமே என் பாரத மாதாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி. நான் எப்போதும் சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். எனக்கு தெலுங்குடன் எப்போது சிறப்பு தொடர்பு உள்ளது என்பது அதிர்ஷ்டமாகும். நாயக்கர் மன்னர்கள், கட்டபொம்மு நாயக்கர், தியாகராஜகிருதிகள் பாடி புகழ் பெற்ற நாட்களை ரசித்து வளர்ந்தவள் நாள். தெலுங்கில் எனது திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன்.
தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் நல்ல குடும்பத்தை வழங்கியுள்ளார்கள். நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களுக்குச் சூழல்களை சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை மீண்டும் இப்போது வலியுறுத்துகிறேன். என்னுடைய தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது என்பது என்னுடைய நோக்கமாக இருந்தது இல்லை. கவனக்குறைவாக பேசிய வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன்.
அனைவரின் நலன் கருதி, நவம்வர் 3 ம் தேதி அன்று நான் பேசிய உரையில் தெலுங்கு மக்களுக்கு எதிரான எனது அனைத்து பேச்சுக்களையும் திரும்பப் பெறுகிறேன் . அந்த உரையில் நான் எழுப்பிய மிக முக்கியமான விஷயங்களில் இருந்து இந்த சர்ச்சை கவனத்தை திசை திருப்பியிருக்கிறது. தமிழ்நாட்டின் தெலுங்கு சகோதரர்கள் தமிழ்நாட்டின் பிராமணர்களின் கண்ணியத்திற்கான போராட்டத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்” எனக் கூறி உள்ளார்.