அடேங்கப்பா ‘ஆம்னி’ கட்டணம்… கை கொடுத்த அரசுப் பேருந்துகள்!
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள், பண்டிகை முடிந்து நேற்று முன்தினம் முதல் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினர்.
தீபாவளிக்கு முன்னதாக எப்படி தென்மாவட்டங்கள் உட்பட பல்வேறு ஊர்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டனவோ அதேபோன்று திரும்ப வருவதற்கும் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, ராமநாதபுரம் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அந்த வகையில் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர். பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 2 ம் தேதி முதல் 4 தேதி வரை அதாவது இன்று வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 3,405 பேருந்துகளும் என ஆக மொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்ததுர
கை கொடுத்த அரசுப் பேருந்துகள்
ஏற்கெனவே ரயில்கள் முன்பதிவு டிக்கெட்டுகள் இல்லாத நிலையில், முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் கூட்டம் அதிகமாக நிரம்பி வழிகிறது. இதனால் ஏற்கெனவே முன்பதிவு செய்யாதவர்களில் சற்று சொகுசாக பயணிக்க நினைப்பவர்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடினர். ஆனால் அதன் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகமாக காணப்பட்டது. இதனால், அவர்களுக்கும் அரசுப் பேருந்துகளே கை கொடுத்தன.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பற்றாக்குறையாக உள்ள இடங்களுக்கு தனியார் ஒப்பந்த பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதில் அரசுப் பேருந்துகளில் வசூலிக்கும் அதே கட்டணமே வசூலிக்கப்பட்டது.
அந்த வகையில், நேற்று மற்றும் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளது சாதனையாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்துத் துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காகவும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் 03/11/2024 ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, பிற இடங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு வழக்கமாக இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும் 03 /11/2024 அன்று மட்டும் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது முன்பதிவு செய்து பயணம் மேற்க்கொண்ட பயணிகள் எண்ணிக்கையின் அதிகபட்ச உச்சமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி படையெடுத்ததால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் நேற்று இரவு முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு இன்று காலை வந்திறங்கிய பயணிகள், நகரின் பல்வேறு இடங்களுக்கு உடனுக்குடன் செல்லும் வகையில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் கூட்டம் நிரம்பி வழிந்தது.