உச்சம் தொடும் தங்கம் விலை… காரணம் என்ன?
தங்கத்தின் விலை கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், அதே மாதம் 22 ஆம் தேதியன்று மத்திய அரசு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்ததன் பலனாக தங்கத்தின் விலை அதிரடியாக குறையத் தொடங்கியது. சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51,000 க்கும் கீழே சென்றது.
ஆனால், இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்த நிலையில், அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால், கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அக்.16 அன்று ஆபரணத் தங்கம் விலை மற்றொரு புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.57,120 என்ற நிலையில் விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம். ரூ.7,240-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் ரூ.57,920 ஆக விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.105-க்கு விற்பனையாகிறது. தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வருவது சாமானியர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன?
வழக்கமாக பண்டிகை காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் நெருங்கினால் தங்கம் விலை எகிடுதகிடாக எகிறுவது வாடிக்கைதான். ஆனால், சர்வதேச பொருளாதார நிலவரங்களால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதும், இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்குவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தங்கத்தின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் ரூ.7,500 வரையும், ஒரு பவுன் ரூ.60,000 வரையும் அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
எனவே முதலீட்டு அடிப்படையில் சேமிக்க நினைப்பவர்கள், தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்பதே அவர்களது கருத்தாக உள்ளது.