67 வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள், உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் நடைபெற்றன.
இந்த காவல் பணித்திறன் போட்டிகள், அறிவியல் சார்ந்த புலன்விசாரணை திறன் போட்டி, கணினித்திறன் போட்டி, வெடிகுண்டு தடுப்புத்திறன் போட்டி, மோப்ப நாய் திறன் போட்டி, வீடியோ படம் எடுத்தல் மற்றும் காவல் தொழில் ரீதியாக புகைப்படம் எடுக்கும் திறன் போட்டி ஆகிய ஆறு பிரிவுகளில் நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு உட்பட 21 மாநில காவல் துறை அணிகளும் 7 மத்திய சிறப்பு படை பிரிவு அணிகளும் கலந்து கொண்டன. தமிழக காவல்துறை குழுவிற்கு, தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநர் சேர்மராஜனின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
5 பதக்கங்களை வென்ற தமிழக காவல்துறை
இப்போட்டியில் பங்கேற்ற தமிழக காவல்துறைக்குழு 2 தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்தது.
மேலும், அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன் போட்டியில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக்கான வெற்றிக்கோப்பைகளையும் தமிழ்நாடு காவல்துறை குழு வென்றது.
வெற்றி பெற்ற குழுவினர், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளுடன் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் -ஐ சந்தித்து, அவரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றனர்.