போலி 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம்… அரசு எச்சரிக்கை… கண்டறிவது எப்படி?

நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளைப் போலவே இருக்கும் போலி நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த போலி 500 ரூபாய் நோட்டுகள் உண்மையானவற்றைப் போலவே தோற்றம், நிறம் மற்றும் தரத்தில் உள்ளதால், பொதுமக்களுக்கு அவற்றைக் கண்டறிவது சவாலாக உள்ளது. இதனால் வருவாய் புலனாய்வு இயக்குநரகம், நிதி புலனாய்வு பிரிவு, சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை, செபி ( DRI, FIU, CBI, NIA, SEBI) போன்ற மத்திய நிதி மற்றும் புலனாய்வு அமைப்புகளையும் அரசு இது தொடர்பாக உஷார்படுத்தி உள்ளது.
போலி நோட்டுகளை கண்டறிவது எப்படி ?
போலி 500 ரூபாய் நோட்டுகள் உண்மையானவற்றைப் போலவே இருந்தாலும், ஒரு முக்கிய எழுத்துப் பிழை மூலம் அவற்றை அடையாளம் காணலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, உண்மையான நோட்டில் “RESERVE BANK OF INDIA” என்று எழுதப்பட்டிருக்கும், ஆனால் போலி நோட்டில் “RESERVE” என்ற வார்த்தையில் ‘E’க்கு பதிலாக ‘A’ (RASERVE) என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது.
இந்த சிறிய பிழையை, கவனமாகப் பார்க்காவிட்டால் எளிதில் ஏமாந்து விட வாய்ப்புள்ளது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த எழுத்துப் பிழை மிகவும் நுட்பமானது என்பதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இதை எளிதில் கவனிக்காமல் போகலாம். இதனால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, போலி நோட்டுகளை அடையாளம் காண உதவும் படங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய நோட்டுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக விசாரணை முகமைகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ஏற்கனவே பெருமளவு போலி நோட்டுகள் சந்தையில் பரவியுள்ளதாக புலனாய்வு முகமைகள் எச்சரிக்கின்றன. ஆனால் அவற்றின் மொத்த அளவு தெரியவில்லை.
அரசு, போலி நோட்டுகளைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தேசிய புலனாய்வு முகமை (NIA), FICN ஒருங்கிணைப்பு குழு (FCORD) மற்றும் பயங்கரவாத நிதியுதவி மற்றும் போலி நாணய செல் (TFFC) ஆகியவை இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வங்கிக் கிளைகள், நாணயப் பெட்டகங்கள், மற்றும் குறிப்பிட்ட அலுவலகங்களில் போலி நோட்டுகளைக் கண்டறியும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை, நோட்டுகளின் தரம், அச்சு மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பரிசோதிக்கின்றன.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை
அரசு, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 500 ரூபாய் நோட்டுகளைப் பெறும்போது, “RESERVE BANK OF INDIA” என்ற எழுத்தில் ‘E’ உள்ளதா என்பதை கவனமாகப் பரிசோதிக்க வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான நோட்டுகள் கிடைத்தால், அருகிலுள்ள வங்கி அல்லது காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். இத்தகைய நோட்டுகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும். மேலும், இது பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.