திடீர் தீவிபத்தானாலும் எந்த ஒரு புயல் வெள்ளமானாலும் தீயணைப்புத்துறையின் பங்குதான் முக்கியமானதாக இருக்கும்.
சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை நேரத்தில், அவர்கள் மக்களை எப்படிக் காப்பாற்றினார்கள் என்ற அனுபவதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது.
வெள்ள நேரத்தில் அந்த மாவட்டங்களில் பணியாற்றிய தீயணைப்புத்துறை பணியாளர்கள் சிலரிடம் பேசினோம்.
“மழைக்கு முன்னதாகவே எங்கள் பணியாளர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பாதிப்பு இருக்கும் என்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தோம். தூத்துக்குடியில் மழையின் அளவு 27 சென்டி மீட்டர் என்றுதான் வானிலை ஆய்வு மையத் தகவலின் படி முதலில் எதிர்பார்த்தோம். ஆனால் 90 சென்டி மீட்டர் மழை பெய்தது. அதாவது நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகப் பெய்தது.
மீட்பு நடவடிக்கைகளுக்கு, எங்களிடம் இருந்த வாகனங்களோ உபகரணங்களோ பணியாளர்களோ போதாது என்று முடிவு செய்தோம். பக்கத்து மாவட்டங்களான மதுரை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களைத் தொடர்பு கொண்டோம். அங்கிருந்து 360 பணியாளர்களை வரவழைத்தோம். அதுதவிர 19 படகுகள், 16 தீயணைப்பு வாகனங்களும் கொண்டு வரப்பட்டன.
தாமிரபரணியில் திடீர் என்று வெள்ளம் வர ஆரம்பித்தது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பலரை நாங்கள் உடனடியாகக் களத்தில் இறங்கி மீட்டோம். ஆறுமுகநேரியில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பேர் நல்ல வேளையாக ஒருவர் மரக்கிளையையும் மற்றொருவர் கம்பம் ஒன்றையும் பிடித்து தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களை உடனடியாக மீட்டோம்.
ஏரல், ஆத்தூர் ஆகிய இடங்களில் பாலங்கள் சேதமடைந்து ஒரு புறத்தில் இருப்பவர்களால் இன்னொரு பகுதிக்கு வர முடியவில்லை. தொடர்பு சுத்தமாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. படகுகள் மூலம் அவர்களை மீட்டோம்.
எங்கே எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது மொபைல் நெட் வொர்க் கிடைக்காததால் மிகுந்த சிரமமாக இருந்தது. காவல்துறையினர் உதவியில் வாக்கி டாக்கி வைத்து தகவல்களை அறிந்து கொண்டோம்.
டிசம்பர் 17 ஆம் தேதியில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டோம். மொத்தம் 5 ஆயிரத்து 477 பேரைக் காப்பாற்றினோம். இதில் 2 ஆயிரத்து 546 பேர் ஆண்கள், 2 ஆயிரத்து 464 பேர் பெண்கள், 437 குழந்கைள்.
இது தவிர, வெள்ளத்தில் சிக்கிய 638 விலங்குகளையும் காப்பாற்றினோம்.
வாகனம் போகும் அளவுக்கு சாலை ஓரளவுக்கு நன்றாக இருந்த இடங்களில், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல லாரிகள் மற்றும் மினி ட்ரக்குகளைப் பயன்படுத்தினோம்” என்று தெரிவித்தனர்.
தீயணைப்புத்துறையினரின் இந்த துரிதமான செயல்பாடுகள் தான் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேருக்கும் மேல் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. அரசு எந்திரம் முறையாகச் செயல்பட்டால், எத்தகைய பேரிடரையும் சமாளித்து விட முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.