Amazing Tamilnadu – Tamil News Updates

3வது நாளாக களத்தில் தீயாய் வேலை செய்யும் தமிழக அரசு!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க முதலமைச்சரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் இரவு பகலாக களத்தில் தீயாய் வேலை செய்து வருகிறார்கள்.

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர்.

கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்பு மற்றும் விசாரணை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த மூன்று நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

இன்று மூன்றாவது நாளாக அனகாபுத்தூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும் அரசின் மீட்புப் பணிகளுக்குத் துணைநின்று தன்னார்வலர்கள் பலரும் உதவி வருகிறார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்து மழை தண்ணீர் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் அமைச்சர்கள்  மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல் அம்பத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் சீர் செய்யப்பட்ட மழைநீர் வடிகால் பணியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளை நேரில் சென்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்தார்.

துறைமுகம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து, மழைநீர் வெளியேற்றும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வி.பி ராமன் சாலை, லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் எ.வ.வேலு, வேளச்சேரி பகுதிப் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகளை ஆய்வு மேற்கொண்டு, JCB மூலம் நேரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை திடீர் நகர், கோதா மேடு, சலவையாளர் காலனி , அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து அப்பகுதியில் உள்ள 7000 குடும்பங்களுக்கு தலா ஒரு லிட்டர் பால் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். 

இப்படிக் கடந்த மூன்று நாட்களாக முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தி.மு.கவினர் இரவு பகல் பாராமல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது மின்னல் வேக நடவடிக்கை காரணமாகச் சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

Exit mobile version