ஆசிரியர் பணியைத் தங்களது வாழ்நாள் கனவாக கொண்டிருப்பவர்களுக்கு, அந்த கனவை நனவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும், பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வருகிற ஜனவரி மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த தேர்வில் பங்கேற்க, வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30 ஆம் தேதி ஆகும்.
காலிப்பணியிட விவரங்கள்
தமிழுக்கு 371 காலி பணியிடங்களும், ஆங்கிலத்துக்கு 214 பணியிடங்களும், கணிதத்துக்கு 200 பணியிடங்களும், இயற்பியலுக்கு 274 பணியிடங்களும், வேதியியலுக்கு 273 பணியிடங்களும், வரலாறுக்கு 346 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தகுதி என்ன?
இந்த வாய்ப்புக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு மற்றும் பி.எட் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், ‘DET’ எனப்படும் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் எப்போதும் முன்னணியில் உள்ளது. இந்த 2,222 ஆசிரியர் பதவிகள் மூலம், மாநிலத்தின் கல்வித் திறன் மேலும் மேம்படும். இந்தத் தேர்வின் மூலம் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே புதிய சிந்தனைகளையும் ஆற்றலையும் விதைத்தால், எதிர்கால தமிழகம் கல்வியில் இன்னும் முன்னேறி செல்லும் என்பதில் ஐயமில்லை!