2026 தேர்தலுக்கான திமுக-வின் பிரசார உத்தி எப்படி இருக்கும்? விவரிக்கும் ஸ்டாலின்!

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு திமுக-வினர் எப்படி தயாராக வேண்டும், பிரசாரங்கள் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும், அரசின் திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கி தமது கட்சியினருக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் விரிவாக கடிதம் எழுதி உள்ளார்.
” இனி ஓராண்டு காலம் நமக்குத் தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்கும். அதற்கான செயல்திட்டங்கள் என் தலைமையில் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். கழகத்தின் பவள விழாப் பொதுக்குழு ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறவிருப்பதைக் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதில், தேர்தல் பணிகள் குறித்து இன்னும் விரிவான செயல்திட்டங்கள் முன்வைக்கப்படும்.
அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் 1,244 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் ஆட்சியின் சாதனைகளையும்; அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் ஒவ்வொரு இடத்திலும் எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற முத்திரைத் திட்டங்களால் மக்கள் பெற்றுள்ள நன்மைகளைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைப்பது அவசியமாகும். நீண்ட நேரம் உரையாற்ற வேண்டிய கட்டாயமில்லை. எளிமையாக – இனிமையாக – சுருக்கமாக – கேட்பவரைக் கவர்கின்ற வகையில் எடுத்துரைத்தாலே திராவிட மாடல் அரசின் திட்டத்தால் பயன் பெற்றுள்ள தமிழ்நாட்டு மக்கள் அதனைப் புரிந்துகொள்வார்கள்.
கழகப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக – மோசமாக – ஆபாசமாக – அருவருப்பாகப் பேசினாலும், நமது பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்திடக் கூடாது என்பதை அறிவுறுத்தலாகவும் கட்டளையாகவும் தெரிவிக்கிறேன். ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் சொன்னதைச் செய்தது மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து காட்டியிருக்கிறோம். அவற்றை எடுத்துச் சொன்னாலே போதும். குறைகுடங்கள் கூத்தாடுவது போல, நிறைகுடமான நாம் இருந்திட வேண்டியதில்லை.
பல வேலைச் சூழல்களுக்கிடையதான் பொதுக்கூட்டங்களில் பேசப்படுவதைப் பொதுமக்கள் உற்று கவனிக்கிறார்கள். அவர்களின் மனதில் பதியக்கூடிய வகையில், நிமிட நேரத்தில் செய்தியின் சாரத்தைச் சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்களாக நம் சொற்பொழிவாளர்கள் இருந்திடுவது அவசியம். பொதுக்கூட்டங்களுக்குக் கழகத்தின் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் கட்டாயம் வருகின்ற வரையில் மாவட்ட – ஒன்றிய -நகர – பகுதிக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்கள்தான் சொற்பொழிவாளர்களின் கருத்துகளை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்கக் கூடியவர்கள்.

பொதுக்கூட்டங்கள் என்பவை தேர்தல் களத்திற்கு உத்வேகம் தரக்கூடியவை. அத்துடன், இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புகின்ற – அவர்களின் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகவே ஆகிவிட்ட சமூக வலைத்தளங்களிலும் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும், கழகத்தின் மற்ற நிர்வாகிகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும். கழக நிர்வாகிகளையும் வாக்காளர்களையும் இணைக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுக்களில் ஒவ்வொருவரும் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். தலைமைக் கழகம் சார்பிலும், கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பிலும் மற்ற அணிகளை ஒருங்கிணைத்தும் அனுப்பப்படும் செய்திகளை அவரவர் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர வேண்டும். கழக அரசின் சாதனைகளும் அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும்.
ஒரு மணி நேரப் பேச்சைவிட, ஒரு நிமிட – அரை நிமிடக் காணொலிகள், ரீல்ஸ்கள்தான் இலட்சக்கணக்கானவர்களிடம் உடனடியாகப் போய்ச் சேர்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட பொறுப்பினை ஏற்று, கழக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு பெற்றுள்ள இளம்பேச்சாளர்கள் பலருடைய உரைகளை ஒரு நிமிடக் காணொலியாகப் பார்க்கிறேன். அவர்களின் ஆர்வத்தை, உத்வேகத்தை, கொள்கையுணர்வைக் கண்டு மகிழ்கிறேன். கழக நிர்வாகிகளும், பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் இத்தகைய உரைகளைக் கேட்டு அவற்றைப் பகிர்வதுடன், அவரவர் பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் சமூக வலைத்தளங்கள் – வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும். நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காகக் கழக அரசு செய்ததைச் சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம். கழக சொற்பொழிவாளர்களின் கருத்துகளை உள்வாங்கி, கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்!” என அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.