2023: முன்னணி ஹீரோக்கள் இல்லாமலேயே கவனம் ஈர்த்த படங்கள்… இயக்குநர்கள்!
வருகிற பொங்கல் பண்டிகைக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மிஷன் – சாப்டர் 1 உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. இவற்றில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், அறிமுக இயக்குநர்கள் இயக்கி, முன்னணி நட்சத்திரங்களும் நடிக்காமல் வெளியான படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்ற படங்களும் கணிசமாக இடம்பெற்றிருந்தன. அவற்றில் டாப் 10 படங்கள் இங்கே…
யாத்திசை
மன்னர்களால் வீழ்த்தப்பட்ட சிறு குடிகளின் மீண்டெழும் கதையை அனேகமாக தமிழ் திரை உலகில் முதலில் பேசிய பட இதுவாகதான் இருக்கும். மன்னர் கால வாழ்க்கையை ‘ரொமாண்டிசைஸ்’ செய்யும் பழைய கருப்பு வெள்ளை காலத்து படங்கள் முதல் மணிரத்னத்தின் லேட்டஸ் ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் வரையிலான நாயக பிம்ப சினிமாக்களின் அடிப்படை அம்சத்தையே திரைக்கதை ரீதியாக தகர்த்த படம் ‘யாத்திசை’.
சங்கத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி உரையாடல் அமைத்திருப்பது அழகான முயற்சியாக அமைந்திருந்தது.
பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் கடும் உழைப்பைச் செலுத்தி மிகச் சிறந்த படத்தை கொடுத்திருந்த இயக்குநர் தரணி ராஜேந்திரனும் அவரது குழுவினரும் 2023-ல் கவனம் பெற்றனர்.
அயோத்தி
மொழிப் புரியாத ஊரில் திக்கற்று நிற்கும் குடும்பத்துக்கு ஆதரவாக மனிதத்தையும் சகோதரத்துவத்தையும் முன்னிறுத்தும் படமே ‘அயோத்தி’. ‘அயோத்தி’ என்று டைட்டில் இருந்தாலும், மதவாதம் உள்ளிட்ட பிரச்னைகளைப் பற்றியெல்லாம் பெரிதாக பேசாமல், மனிதம் பற்றிய ஒரு எமோஷனல் கதையாக மட்டுமே படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் மந்திர மூர்த்தி.
அதனுடன் சட்டச் சிக்கல்கள், அதனால் அவதியுறும் எளிய மக்கள், சிக்கலான விதிமுறைகள் இருந்தாலும் அதையும் கடந்து துளிர்க்கும் மனிதம் என உணர்வுபூர்வமான காட்சிகள் படம் நெடுகவே நிரம்பிக் கிடந்தன. சில இடங்களில் சினிமாத்தனம் வெளிப்பட்டாலும் பரபரப்பான திரைக்கதை அந்தக் குறையை மறக்கடிக்கச் செய்தது.
அடிதடி சண்டை, நட்பு மற்றும் சொந்தங்களின் துரோகம் போன்ற தன் வழக்கமான பார்முலாவிலிருந்து விலகி, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யும் நடிகனாகத் தன்னை முன்னிறுத்தியிருந்தார் சசிகுமார்.
தீராக் காதல்
காதலிக்கும் அனைவருக்குமே அந்தக் காதல் திருமணத்தில் போய் முடிவதில்லை. அப்படி சேராத காதல்கள் இருவேறு திசைகளில் சென்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அதுவே ‘தீராக் காதல்’.
காதலில் தோற்று வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டவர்களிடையே, முந்தைய காதல் மீண்டும் துளிர்ப்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் முன்வைத்து கதை-திரைக்கதை அமைத்திருந்தார்கள் இயக்குநர் ரோஹின் வெங்கடேசனும் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத்தும். சற்று எல்லை கடந்திருந்தால்கூட ஆபாசத்தைத் தொட்டிருக்கக்கூடிய கதைக்களத்தை மிகுந்த கவனத்துடன் கையாண்டு ஒழுக்கநெறிகளையும் கண்ணியத்தையும் மீறாத திரைப்படமாகக் கொடுத்தது பாராட்டுக்குரியதாக இருந்தது .
படத்தில் பழைய காதலர்களுக்கு இடையிலான சில தருணங்கள் மிக அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கிடா
தீபாவளிக்கு தனது பேரன் விரும்பும் புதிய ஆடையை வாங்குவதற்கு ஒரு தாத்தா ஒரு ஆட்டை விற்க முடிவு செய்கிறார். ஆனால் ஆடு காணாமல் போகிறது, அது அவரது நம்பிக்கையை மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள சிலரின் நம்பிக்கையையும் சிதைக்கிறது.
எளிமையான மேக்கிங் மற்றும் திரைக்கதையில் சில சமயங்களில் வழக்கமான ஃபார்முலா வெளிப்பட்ட போதிலும், கதாநாயகர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்புடையதாக இருந்ததால், அதில் நம்மை லயிக்க வைத்தார் இயக்குனர் ரா வெங்கட் .
கடன் வாங்கச் செல்லும் இடங்களில் ஏமாற்றத்தையும், தனது பேரன் அளவுக்கு மீறி ஆசைப்படுகிறான் என்று மற்றவர்கள் இழிவு செய்யும் இடத்தில் வைராக்கியத்தையும் காட்டி தனது தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார் மறைந்த நடிகர் ‘பூ’ ராம். கறி வெட்டும் வெள்ளைச்சாமி கதாபாத்திரத்தில் வந்த காளி வெங்கட், மதுவினால் ஏற்படும் தள்ளாட்டம், கிராமத்து லந்து, கறிக்கடை வைக்கப் போராட்டம் என வெள்ளந்தி மனிதராகக் கன கச்சிதமாகப் பொருந்திப் போனார்.
பொம்மை நாயகி
சாதிய தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அப்பா – மகள் பாசம் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளி வந்த படம் பொம்மை நாயகி. விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு ஒரு அநீதி நடந்து அவர்கள் போராடினால் இந்த சமுதாயத்தில் என்ன நடக்குமோ அதனையே படமாக எடுத்திருந்தார் இந்தப் படத்தின் அறிமுக இயக்குநர் ஷான்.
பா. இரஞ்சித் தயாரிப்பு என்றாலும் வழக்கமான அம்பேத்கர் புரட்சி வசனங்கள் பெரிதாக இடம் பெறாமல், இடதுசாரிய சிந்தனையை கருத்தியலாகக் கொண்டு இயக்குநர் திரைக்கதையை உருவாக்கி இருந்தார். பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து படம் விரிவாகப் பேசி இருந்தது. தன்னை எப்போதுமே ஒரு காமெடியன் என்று சொல்லிக் கொண்டாலும், கனமான கதாபாத்திரங்களையும் நேர்த்தியாகக் கையாள முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் யோகி பாபு நிரூபித்து இருந்தார். படத்தில் அவர் எங்குமே சிரிக்கவில்லை.
யோகி பாபுவின் நேர்த்தியான நடிப்பு படத்தில் நிறைவாக இருந்தது.
சித்தா
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளும், அதனால் குழந்தையும், குடும்பமும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது எனச் சொல்லிய படம் ‘சித்தா’.
இயக்குநர் அருண்குமார், படத்தில் சின்ன விஷயங்களில் துவங்கி உணர்வு ரீதியான போராட்டம் வரை கச்சிதமாக பதிவு செய்திருந்தார்.
சித்தார்த் கதாநாயகனாக அல்லாமல் கதையின் நாயகனாக நடித்திருந்தார் என்றே சொல்லலாம். படத்தில் பார்த்த சித்தார்த்தை தொடர்ந்து நாம் பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்த படத்தில் முழுக்க முழுக்க புதியவராக தெரிந்தார். அழுக்கு சட்டை போட்டாலும், பணக்கார வீட்டு பையனாகவே தெரியும் சித்தார்த்தை முதல் முறையாக கதாபாத்திரத்திற்கான நடிகராக பார்க்க முடிந்தது. தன் மீது பழி விழுந்ததும் என்ன நடந்தது என்று தெரியாமல் தடுமாறுவது, மகள் காணாமல் போனதால் நிலைகுலைந்து போவது என அனைத்து காட்சிகளிலும் உணர்ச்சிரமான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருந்தார்.
2023 ல் வெளியான சிறந்த படங்களில் சித்தா’ வுக்கும் கண்டிப்பாக இடமுண்டு.
போர் தொழில்
ஒரு முழுமையான க்ரைம் த்ரில்லர் படம் தமிழ் சினிமாவில் வருவது அபூர்வமானதுதான். ஒரு நாவலை படிப்பது போன்ற பரபரப்புடன் நகரும் படங்கள்தான் ரசிகர்களை ஈடுபாட்டுடன் ரசிக்க வைக்கும். அப்படி ஒரு படமாக இந்த ‘போர் தொழில்’ படம் அமைந்திருந்தது.
அந்தக் கொலை குறித்த விசாரணை முறைகளை முற்றிலும் வித்தியாசமாகவும், அசாதாரணமானதாகவும் இடம்பெறச் செய்து படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருந்தார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. ஒரு அறிமுக இயக்குநரிடமிருந்து இப்படி ஒரு நேர்த்தியான படம் வந்ததும் ஆச்சர்யம்தான்.
கடுகடுப்பான முகத்துடன் கறார் காட்டும் உயர் அதிகாரியாகவும், எமோஷனலான காட்சி ஒன்றில் முகத்திலிருந்து மொத்த நடிப்பை கடத்தும் இடத்திலும் ‘மூத்த’ நடிகர் என்ற முத்திரையைப் பதித்திருந்தார் சரத்குமார். இன்னசென்ட் இளைஞராக அசோக் செல்வனின் நகைச்சுவை கலந்த உடல்மொழி, ஆங்காங்கே சில ஒன்லைன்கள், அறிவுஜீவியாக காட்டிக்கொள்ள செய்யும் செயல்கள் என படம் முழுக்க அவரது நடிப்பு ரசிக்க வைத்தது.
குட்நைட்
‘குறட்டை’யை மையமாக வைத்து அழகான, உணர்வுபூர்வமான ‘ஃபீல்குட்’ படத்தைக் கொடுத்திருந்தார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். ‘குறட்டை’தான் மையம் என்றாலும், அதைச் சுற்றி நாயகனின் குடும்பம், நாயகிக்கென தனித்துவப் பின்னணி, அழகான காதல் காட்சிகள், திருமண வாழ்வில் ஏற்படும் இயல்பான பிரச்னைகள் என திரைக்கதையை ரசிக்கும்படியாக நகர்த்திச் சென்றிருந்தது பாராட்டும்படி இருந்தது.
மணிகண்டன், கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி யதார்த்தமான நடிப்பை வழங்கி இருந்தார். தனது பிரச்னையால் மனைவி உடல்நலம் பாதிக்கப்படுவதை உணர்ந்து அழும் காட்சிகளில் அவரது நடிப்பு மனதைத் தொட்டது. அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் அதே நேரத்தில் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத நாயகியாக மீதா ரகுநாத் சிறப்பான நடிப்பைத் தந்திருந்தார்.
அழகான தருணங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக இணைத்து அழுத்தமான ஒரு படைப்பாக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இப்படத்தை படத்தைக் கொடுத்திருந்தார்.
குய்கோ
குடியிருந்த கோயில் என்ற வார்த்தையின் சுருக்கமே ‘குய்கோ’ என இப்படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டது.
ஒரு சாதாரண கதையை இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்ல முடியுமா என்று ஆச்சரியப்படுத்தி இருந்தார், அறிமுக இயக்குநர் டி.அருள் செழியன். சடலம் சுமக்கும் ‘பிரீஸர் பாக்ஸு’க்கு சென்டிமென்ட் டச் கொடுத்து திரைக்கதை அமைத்திருந்தது புதுமை.
“ஆடு மேய்க்கிறவரை ஆண்டவரா ஏத்துக்கிட்டாங்க, இந்த மாடு மேய்க்கிறவனை மாப்பிள்ளையா ஏத்துக்க மாட்டியா?” என்பது போன்ற கிண்டலடிக்கும் வசனங்களும் கதையோடு இணைந்த டைமிங் காமெடியும் ‘குய்கோ’வின் இன்னொரு ப்ளஸ்.
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்தின் அழகை, பசுமை மாறாமல் காட்சிப்படுத்தி இருந்தது. அந்தோணி தாசனின் இசையில் ‘அடி பெண்ணே உன்னை’, ‘ஏய், என் செகப்பழகி’ பாடல்கள் ரசிக்க வைத்தன. சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும் ‘குய்கோ’குடும்பத்துடன் ரசிக்கும்படி இருந்தது.
பார்க்கிங்
ஒரே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு நபர்களுக்கு அங்கிருக்கும் ஒரே பார்க்கிங்கால் வரும் சண்டை எந்தளவு நீள்கிறது, ஒரு சின்ன ஈகோவில் என்னென்ன எல்லாம் பிரச்னை ஏற்படுகிறது என்பதுதான் பார்க்கிங் திரைப்படத்தின் ஒன்லைன்.
மனித மனங்களின் அடி ஆழத்தில் இருக்கும் அகம்பாவத்தையும் சிறுமைகளையும் கீழ்மைகளையும் தோண்டி எடுத்து விஸ்வரூபமாக வெளிப்பட வைக்கின்றன என்பதைக் கச்சிதமாக உணர்த்தி, முதல் படத்திலேயே சிறப்பாக கதை களத்தை கொடுத்து இருந்தார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
நடிகர்கள் தேர்வு, கதைக்களம், வசனங்கள் என அனைத்தும் கச்சிதம். அரசு ஊழியராக வரும் எம் எஸ் பாஸ்கர் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருந்தார் ஹரிஷ் கல்யாண்.
ஈகோ, ஒரு மனிதனை எவ்வளவு மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதையும் ஆண்களின் வறட்டு கவுரவம் குடும்பப் பெண்களை எப்படிப் பாதிக்கிறது என்பதையும் மனிதர்களுக்குள் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியதன் அவசியத்தையும் துளியும் பிரச்சார நெடியின்றி சொல்லிய இப்படம் ஆண்டின் கடைசியில் கவனம் ஈர்த்த படமாக அமைந்தது.