2025 ஜூனில் 2 ஆவது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு!
2 ஆவது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழ்நாடு அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறது.
பண்டைய தமிழர்களின் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவையும், நாகரிக வாழ்வையும் நுணுக்கமாகப் பறைசாற்றும் வகையில், கீழடி அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் தற்போது அமைத்து வருகிறது.
அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை, தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ‘தமிழ் மொழி தொன்மையானது மட்டுமல்ல; இந்தக் காலத்திற்கேற்ற இளமையான மொழி’ என்பதை நிரூபிக்கும் விதத்தில், சமீபத்தில் கணித் தமிழ் மாநாடும் நடத்தப்பட்டது.
உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்க, அயலகத் தமிழர் மாநாடு நடத்தப்பட்டது. இன்னும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை, திருக்கோயில்களில் தமிழ் வழிபாடு… என தமிழ் மற்றும் தமிழர்களின் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழுக்கு உயர்தனிச் செம்மொழி என்ற அங்கீகாரம் அதிகாரப் பூர்வமாக 2004 ஆம் ஆண்டு கிடைத்தது. அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியின் அயராத முயற்சியால், ஒன்றியத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த அங்கீகாரத்தை வழங்கியது. கடந்த 2010 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 23 ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரையில், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது.
இந்த நிலையில், இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சிறப்பாக நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.