1339 கோயில்களுக்கு குடமுழுக்கு… 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 197 கோயில்கள் புரனரமைப்பு!
தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43,000 கோயில்கள் இருக்கின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு வந்த பின்னர் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு உத்தரவிடப்பட்டது.
இதற்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி வீதம் இரண்டு ஆண்டுகளில் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்கு, தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் கலைச்செல்வங்களாக-பண்பாட்டுப் பேழைகளாகத் திகழும் கோயிகளின் பராமரிப்பிலும், மக்கள் மனம் மகிழும் வகையில் கோயில் விழாக்களை தவறாமல் எழுச்சியோடு நடத்துவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
அரசின் நடவடிக்கை காரணமாக, இதுவரை 1339 கோயில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை புனரமைப்பு செய்வதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உபயதாரர்களின் பங்களிப்பையும் சேர்த்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட197 கோயில்களில், ரூ.304.84 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 12 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவுப் பெற்றுள்ளது. 13 கோயில்களுக்கு குடமுழுக்குக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கரூர் மாவட்டம், திருமுக்கூடலூரில் 1000 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோயிலில், ரூ.5 கோடியில் மேற்கொள்ளப்பட இருக்கிற புனரமைப்பு பணியை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடங்கி வைத்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில், ஒருகால பூஜை கூட செய்ய நிதி வசதியில்லாத 12,959 கோயில்களுக்கு வழங்கப்பட்ட வைப்பு நிதி தலா ஒரு லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி, ரூ.130 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2,000 கோயில்கள் ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டு, தற்போது மொத்தம் 17,000 கோயில்கள் பயன்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் பக்தர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.