100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? – மின்வாரியம் சொல்லும் விளக்கம்
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வீடுகளில் குளிர்சாதன பயன்பாடு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, மின்தேவை வழக்கத்தை விட அதிகரித்தது.
இதனால், கூடுதல் மின் தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்கிறது. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் மட்டுமின்றி, காற்றாலை மூலமும் மின்சாரம் பெறப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டுக்கான மின் தேவை 3,000 மெகாவாட்டுக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. இது, மின் வாரியத்திற்கு மேலும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால், மின்சார வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
‘100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து இல்லை‘
இதனை கருத்தில்கொண்டு, ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்பதை இணைப்பதற்கு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். இதனால், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்த வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களிலும் தகவல் பரவியது.
இதனால் ஏழை, எளிய மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்த தகவல் தமிழக அரசுக்கும் எட்டிய நிலையில், 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்றும், ‘அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி’ என்றும் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின்பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.
மின்வாரியம் விளக்கம்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுகிறது. அந்த உத்தரவில் வாடகை வீட்டுக்காரர்களுக்கு மானியத்தில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு வீட்டின் உரிமையாளர் அவரின் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும்.
ஒரே பெயரில் பல இணைப்புகள் வைத்துள்ளவர்களுக்கு தான் இதனால் பாதிப்பு ஏற்படும். ஏழை, நடுத்தர மக்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘வீட்டு உபயோகத்திற்கு இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு மேல் ஆனால் 100 யூனிட் இலவசம் இல்லை’ என்று மொபைல் போன்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ் போலியானது. இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி
இதனிடையே, வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை, மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழக மின்வாரியத்துக்கு வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3.5 கோடி இணைப்புகள் உள்ளன. நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தைக் கணக்கெடுக்க இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்படுகிறது. இந்த மீட்டரில் பதிவாகும் மின்நுகர்வை மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.
இந்த மின்கட்டணத்தை நுகர்வோர் மின்வாரிய மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் உள்ள கவுன்ட்டர்கள், மொபைல் செயலி மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி உள்ளது. இந்நிலையில், வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, 500 யூனிட்டுக்கு மேல் மின் பயன்பாடு உள்ள நுகர்வோர் வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.