10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: அசத்திய அரியலூர் மாவட்டம்!
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 9.10 லட்சம் மாணவர்களும், 28,827 தனித் தேர்வர்களும், 235 சிறைக் கைதிகளும் என மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.
தேர்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 10 ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 20,000 பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். அந்த பணிகள் முடிவடைந்து, மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்தது.
91.55 சதவீதம் பேர் தேர்ச்சி
இதனையடுத்து இன்று காலை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 8 லட்சத்து 94,264 பேரில் 8 லட்சத்து 18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 96,152 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 22,591 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.55 ஆக அதிகரித்துள்ளது.
4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி
மேலும் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ்ப் பாடத்தில் 8 மாணவர்களும், ஆங்கிலத்தில் 415 மாணவர்களும், கணிதத்தில் 20,691 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 5,104 மாணவர்களும், சமூக அறிவியலில் 4,428 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
பள்ளி வாரியான தேர்ச்சி சதவீதம்
அரசுப் பள்ளிகள்: 87.90%
அரசு உதவி பெறும் பள்ளிகள்: 91.77%
தனியார் சுயநிதி பள்ளிகள்: 97.43%
இருபாலர் பள்ளிகள்: 91.93%
பெண்கள் பள்ளிகள்: 93.80%
ஆண்கள் பள்ளிகள்: 83.17%
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்
தமிழ் : 96.85%
ஆங்கிலம் : 99.15%
கணிதம் : 96.78%
அறிவியல் : 96.72%
சமூக அறிவியல் 95.74%
அசத்திய அரியலூர் மாவட்டம்
அதேபோல் அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.02% தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டம் 96.36% தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 82.07% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 12,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தேர்வெழுதிய 260 சிறைவாசிகளில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மறுதேர்வு எப்போது?
10 ஆம் வகுப்பு மாணவர்க,ள் மறுகூட்டலுக்கு வருகிற15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு, வருகிற ஜூலை 2 ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.