Amazing Tamilnadu – Tamil News Updates

1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது எப்படி?

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய வேண்டும் என்பதுதான் நமது லட்சியம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். உலக முதலீட்டாளர் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய போதும் அவர் அதைச் சொல்லத் தவறவில்லை.

தற்போது நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு, தமிழ்நாட்டின் இலக்கான ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கு உதவும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றார்போல் முதல் நாளிலேயே இலக்கை தாண்டி 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்து சேர்ந்தது.

தற்போதுள்ள நிலையில், அடுத்த ஏழு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்தால், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதர இலக்கை அடைந்து விடலாம் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

அந்த 18 சதவீத வளர்ச்சி என்பதை சாத்தியப்படுத்த, தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டாளர் மாநாட்டைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். தமிழ்நாட்டில் சைக்கிளில் ஆரம்பித்து பீரங்கி வரையில் அனைத்துப் பொருட்களின் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழ்நாடு ஆட்டோமொபைல் துறையிலும் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் தனித்துக் காணப்படுகிறது.

உற்பத்தி, லாபம், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி என எல்லாவற்றிலும் இந்தத்துறைகள் முன்னணியில் இருக்கின்றன. தற்போது உலக முதலீட்டாளர் மாநாட்டில் எலெக்ட்ரானிக் வாகனங்கள், செமிகண்டக்டர், ஜவுளி, புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றல் என பல்வேறு துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

‘எலெக்ட்ரானிக், சர்வதேச திறன் மேம்பாட்டு மையங்கள், தோல்சாரா காலணி, புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் ஆகிய துறைகளில் முதலீட்டை ஈர்ப்பது தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும்’ என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். அந்தத் துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

முதலீட்டாளர் மாநாட்டில், செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட எலக்ட்ரானிக் கொள்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்கவும், அந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கை 40 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் துறையில் பணியாற்றும் திறனுடைய 2 லட்சம் பேரை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் செமிகண்டக்டர் மற்றும் எலெக்ட்ரானிக் துறையில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதோடு, தமிழ்நாட்டின் மனித வளத்தையும் சிறப்பாகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கும் திருப்தி; தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

சர்வதேச திறன் மேம்பாட்டு மையங்களிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது. இந்த மையங்கள் மூலம், உயர்தரமான வேலைவாய்ப்புக்கான பயிற்சி இளைஞர்களுக்குக் கிடைக்கும். அதன் மூலம், திறமை வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பார்கள். இது, பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கும். சுமார் 150 சர்வதேச திறன் மேம்பாட்டு மையங்கள், திறமையாளர்களை உற்பத்தி செய்யும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்து, தமிழ்நாடு கவனம் செலுத்தும் துறை புதுப்பிக்கத்தக்க பசுமை மின் உற்பத்தி, ஏற்கனவே தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தியிலும் சூரிய ஒளி மின் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. இந்தத் துறைகளில் முதலீடுகளை ஈர்த்து, 2030 ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டை பசுமை மின்உற்பத்தி மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, குறைந்த மின் செலவில் தமிழ்நாட்டில், உற்பத்தித் துறையும் தகவல் தொழில் நுட்பத்துறையும் அபரிமிதமான வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தோல்சாரா காலணி உற்பத்தி. ஏற்கெனவே, தோல் ஷூ உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த தோல்பொருட்கள் ஏற்றுமதியில், 40 சதவீதம் தமிர்நாட்டில் இருந்துதான் ஏற்றுமதியாகிறது. தற்போது உலக முதலீட்டாளர் மாநாட்டில், தோல்சாரா காலணி உற்பத்தியில் தைவானைச் சேர்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம், தோல்சாரா காலணி உற்பத்தி தமிழ்நாட்டில் அதிகரிக்கும்.

இவை அனைத்தும் நடைமுறைக்கு வரும் போது, ஏழு ஆண்டுகளில் அதாவது 2030 ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் 18 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும். அதனால் தமிழ்நாடு திட்டமிட்டுள்ளபடி, ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை சுலபமாக எட்டிப்பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Exit mobile version