‘ஹேக்கத்தான்’ போட்டி: காவல்துறையின் 1 லட்ச ரூபாய் பரிசை வெல்ல நீங்க தயாரா?
இன்றைய டிஜிட்டல் உலகில் இணையமும் தகவல் தொழில்நுட்பமும், அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்த அளவுக்கு தகவல்களைத் தருவதிலும், பணிகளை விரைவாக முடிப்பதிலும் உதவுகின்றனவோ, அந்த அளவுக்கு ‘ஹேக்கர்கள்’ ரூபத்தில் ஆபத்துகளையும் தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது.
இந்த துறையில் தாங்கள் பெற்றிருக்கும் அதீத தொழில்நுட்ப அறிவை, தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தும் இத்தகைய ஹேக்கர்கள், கணினிகள் மற்றும் மொபைல் போன்களில் ஊடுருவி, பண மோசடி, அரசுத் துறை, தனியார் துறை நிறுவனங்களின் இணையதளத்தை முடக்குவது, தகவல்களைத் திருடுவது உள்ளிட்ட பல மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.
இத்தகைய மோசடிகளையும், இணைய குற்றங்களையும் தடுக்கும் நோக்கத்துடன் ‘ஹேக்கத்தான்’ (Hackathon) போட்டியை அறிவித்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்பதற்கேற்ப, தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய போக்குகள், யோசனைகள், தந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை ஆக்கபூர்வமாகவும் திறமையாகவும் பயன்படுத்த தெரிந்த இணைய பாதுகாப்பு ஆர்வலர்கள், YukthiCTF (யுக்தி ) என்ற இந்த போட்டியில் கலந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.
போட்டியில் கலந்துகொள்வது எப்படி?
WEB (வலைச் சுரண்டல்), CRYPTOGRAPHY, FORENSICS, MISCELLANEOUS, PWN/BINARY EXPLOITATION ஆகிய 6 தலைப்புகளில் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்புவர்கள், மேற்கூறிய 6 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து, அதில் பங்கேற்கலாம். ஒரு குழுவில் 4 பேர் இடம்பெறுவார்கள்.
தமிழ்நாடு காவல்துறையின் https://yukthictf.com என்ற இணையதள முகவரியில் சென்று, அதில் காணப்படும் Register Now என்பதை க்ளிக் செய்தால் வரும் பக்கத்தில், போட்டியில் கலந்துகொள்வதற்கான தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை.
தேர்வு எப்போது?
இந்த போட்டிக்கான விண்ணப்ப பதிவு, வருகிற மார்ச் 15 ஆம் தேதிக்குள் செய்யப்பட வேண்டும். மார்ச் 17 ல் முதல்கட்டத் தேர்வு நடைபெறும். அதில், புள்ளிகளின் அடிப்படையில் முதல் 25 இடங்களைப் பிடிக்கும் குழுவினருக்கு மார்ச் 20 ல் இறுதித் தேர்வு நடைபெறும். போட்டியில் கலந்துகொண்ட வெற்றியாளர்கள் யார் என்பது அன்றைய நிகழ்ச்சி முடிவிலேயே அறிவிக்கப்பட்டு விடும்.
முன் அனுபவம்
YukthiCTF போட்டியில் கலந்துகொள்ள ‘ஹேக்கிங்’ குறித்த அடிப்படை அறிவு அவசியம். இதுபோன்ற போட்டிகளில் முன்னர் கலந்துகொண்ட அனுபவம் இருந்தால், அது கூடுதல் தகுதியாக கருதப்படும்.
தேர்வு நடைபெறும் முறை/ இடம்
YukthiCTF நிகழ்வின் முதல் சுற்றுத் தேர்வு 24 மணிநேரம் ஆன்லைனில் நடத்தப்படும். அதே நேரத்தில் இறுதித் தேர்வு, சென்னை சவீதா பொறியியல் கல்லூரியில் ஆஃப்லைனில் நடைபெறுகிறது. இந்த தேர்வும் 24 மணி நேரம் நீடிக்கும்.
வெற்றியாளர்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறார்கள்?
அதிக எண்ணிக்கை மற்றும் குழுவால் திரட்டப்பட்ட மொத்த Zeal புள்ளிகளின் கலவையை அடிப்படையாகக் கொண்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். Zeal புள்ளிகள் என்பது, ஒரு நிஞ்ஜாவாக போட்டியாளரின் ஆர்வம், வேகம், தீவிரம் ஆகியவற்றைக் கண்டறிய உதவும் ஒரு புள்ளி அமைப்பாகும். இந்த புள்ளிகள் மூலம், தனிநபர்களின் செயல்திறனின் அடிப்படையில் போட்டியாளர்கள் தரவரிசைப்படுத்தப்படுவார்கள்.
பரிசுத் தொகை
முதல் பரிசு ரூ. 50,000, இரண்டாம் பரிசு ரூ. 30,000 மற்றும் மூன்றாவது பரிசு ரூ. 20,000 என மொத்தம் ரூ. 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு வாழ்த்துகள்!