வரும் நவம்பர் 4 ஆம் தேதி 8 கிலோ மீட்டர் கொண்ட ‘நடப்போம் … நலம் பெறுவோம்’ என்கிற ‘ஹெல்த் வாக்’ சாலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் தொடங்கப்படவுள்ள இந்த திட்டத்தை முதல்வர் பெசன்ட் நகரில் தொடங்கிவைத்து, நடைப்பயிற்சியும் மேற்கொள்ளவிருக்கிறார். மற்ற 37 இடங்களில் காணொளி வாயிலாகத் தொடங்கிவைக்கிறார்.
சென்னையை பொறுத்தவரை முத்துலட்சுமி ரெட்டி பார்க்லிருந்து பெசன்ட் நகர் கடற்கரை வழியாக அன்னை வேளாங்கண்ணி சர்ச் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பூங்கா வரை ஹெல்த் வாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்த் வாக் சாலையில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சுகாதாரத் துறையின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
“ஒவ்வொரு நாளும் 8 கிலோ மீட்டர் நடந்தால் ஒரு நாளைக்கு 10,000 அடி எடுத்துவைக்க நேரிடும். அது ஒவ்வொருவருக்கும் தினசரி ஆரோக்கியத்தைக் கொடுக்கும்” என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த 8 கிலோ மீட்டர் சாலையில் ஒவ்வொரு நாளும் காலை 5 மணி முதல் 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மக்கள் எந்த விதத்திலும் பயம் இல்லாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ள இதைச் செயல்படுத்துகிறோம். இந்த சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஓய்வு பெறுவதற்கு, ஆங்காங்கே இருக்கைகளும் அமைக்கப்படவுள்ளன” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கின்ற செய்திகளை அதிகளவில் கேள்விப்படுகிறோம். அதற்கு சரியான தூக்கம், உடற்பயிற்சி, உணவு உள்ளிட்டவைகள் இல்லாததே காரணமாக இருக்கின்றன. அந்தவகையில் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பதை தடுக்கும் விதமாகவும், உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.