தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் நிறையத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து பல நிறுவனங்கள் இங்கு வந்து முதலீடு செய்து தொழில் தொடங்குகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் ஜப்பானின் ஹிட்டாச்சி.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இந்த நிறுவனம் தனது எரிசக்தித் திட்டத்தைத் தொடங்கியது. ஹிட்டாச்சி ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் என்பதாலோ என்னவோ சுற்றுச் சூழலில் ஆர்வம் மிக்க நிறுவனமாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு பாதிப்பில் ஆரம்பித்து அணு உலை விபத்து வரையில் சுற்றுச் சூழல் பாதிப்பால் ஏற்படும் துயரத்தை அனுபவித்த நாடு ஜப்பான். ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்தது ஹிட்டாச்சி எனர்ஜி. இது காற்றாலை மின் உற்பத்தியிலும் சூரிய ஒளி மின் உற்பத்தியிலும் ஈடுபடும் உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ஆகும்.
அந்த நிறுவனம் சென்னை போரூரில் சர்வதேச தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை அமைத்துள்ளது. அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார். அந்தப் புத்தாக்க மையத்தில் ஒரு ஆய்வகமும் இருக்கிறது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தை இந்த மையத்தில் கற்றுக் கொள்ள முடியும். அப்படித் தேர்வான 6 மாணவர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி பெறுவதற்கான அனுமதிக் கடிதத்தை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பேசும் போது, உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையம் தமிழக இளைஞர்களுக்கும் தொழில் வல்லுனர்களுக்கும் அதிநவீன தொழில் நுட்பப் பயிற்சியை அளிக்கப் போவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஒரு நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேற வேண்டுமெனில், முதலீடு, உயர் தொழில்நுட்பம், தொழில்நுட்பத்தில் திறன் படைத்த பணியாளர்கள் தேவை.
முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் சர்வதேச அரங்கில் இருந்து தமிழ்நாடு ஈர்த்து வருகிறது. அதே சமயத்தில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அந்த நிறுவனங்களில் பணியாற்றும் தகுதியை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையோடு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இளைஞர்களின் திறனை மேம்படுத்த, அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர ஹிட்டாச்சி எனர்ஜி வந்தாச்சு…