1970, 80 -களில் தமிழ்த் திரையுலகின் ‘ஹிட்’ ஜோடிகளில் டாப் என்றால் அது கமல் – ஸ்ரீதேவி ஜோடிதான். 16 வயதினிலே, கல்யாண ராமன், சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை என இந்த ஜோடி கொடுத்த ஹிட் படங்கள், ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் எனச் சொல்லலாம். அதிலும் ‘மூன்றாம் பிறை’யெல்லாம் செம…
‘இந்த கெமிஸ்ட்ரி… கெமிஸ்ட்ரி’ என்று சொல்வார்களே… அது கமல் – ஸ்ரீதேவி ஜோடிக்கு அப்போ ரொம்பவே ஒர்க் அவுட் ஆகியது என்றே சொல்லலாம். ‘மூன்றாம் பிறை’யை பாலுமகேந்திரா இந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் எடுத்து, அங்கேயும் அது செம ஹிட். இதனாலேயே இந்த ஜோடியை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள் எனலாம்.
அதே சமயம் அந்த ரசிகர்களில் ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரி, ஒருவேளை மிகப்பெரிய ரசிகராக இருந்தாரோ என்னவோ… கமலும் ஸ்ரீதேவியும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் மிகவும் விரும்பி இருக்கிறார். கமலிடமும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் கமல் அதை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துள்ளார்.
இந்த தகவல், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட குறிப்பில் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது கமல்ஹாசனே இந்த தகவலை வெளியிட்டார். தனக்கும் ஸ்ரீதேவிக்கும் நெருங்கிய பந்தம் இருந்ததாகவும், ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது தாயார் அடிக்கடி கேட்டுக் கொண்டதாகவும் உணர்ச்சிவசத்துடன் பகிர்ந்து கொண்டார்.
அதே சமயம், குடும்பத்தில் ஒருவராக கருதும் ஒருவரைத் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதாலேயே ஸ்ரீதேவியை தான் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கமல் தெரிவித்துள்ளார்.
“ஒருவேளை அப்படி நடந்திருந்தால், ஸ்ரீதேவியும் நானும் நிச்சயம் ஒருவரையொருவர் எரிச்சலடைய செய்திருப்போம், அடுத்த நாளே அவரை அவரது வீட்டிற்கு அனுப்ப வேண்டியதிருந்திருக்கும்” என்றும் கமல் கூறியுள்ளார்.
1976 ஆம் ஆண்டு ‘மூன்று முடிச்சு’ படப்பிடிப்பில்தான் ஸ்ரீதேவி 13 வயதாக இருந்தபோது கமல் முதலில் சந்தித்தார். அவர் அப்போது உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டே அந்த படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அப்படித்தான் இருவருக்குமான அறிமுகம் தொடர்ந்தது.
ஸ்ரீதேவி தன்னை மிகவும் உயர்வாக கருதியதால், தன்னை எப்போதும் ‘சார்’ என்றே அழைப்பார் என்றும் கமல் மேலும் தெரிவித்துள்ளார்.