‘விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது. உரிய பயிற்சி இருந்தால் வெற்றி பெற்று விடலாம். உரிய உபகரணம் இருந்தால் என்னால் பயிற்சி பெற முடியும். பயிற்சி பெறப் பணம் இல்லை. இதற்கெல்லாம் உதவி செய்ய யார் இருக்கிறார்கள்..?’ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
அதற்காக தமிழ்நாடு அரசு உருவாக்கி வைத்திருக்கும் அமைப்புதான் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். இந்த ஆணையத்தின் கீழ், ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ என்ற அமைப்பை முதலமைச்சர் கடந்த மே மாதம் தொடங்கி வைத்தார். இந்த அமைப்பு, ஒரே சமயத்தில் இரண்டு பணிகளைச் செய்கிறது. ஒன்று, விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்களிடம் இருந்து நன்கொடைகளைப் பெறுகிறது. இரண்டாவது விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு உரிய உதவிகளை வழங்குகிறது.
இந்த அறக்கட்டளைக்கு முதலமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். அதே போல பல்வேறு பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்தும் இந்த அறக்கட்டளை நிதியைப் பெறுகிறது. இதுவரையில் இந்த அறக்கட்டளை, கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் வரையில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளது.
தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் இந்த அறக்கட்டளையை அணுகலாம். https://tnchampions.sdat.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பித்து உதவிகளைப் பெறலாம்.
வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவது மட்டுமல்ல, வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதும் நமது கடமை என அக்கறையோடு செயல்படுகிறது தமிழ்நாடு அரசு.