விவசாயத்தை நேரடியாகத் தெரிந்து கொள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு!
விவசாயக் கல்லூரி மாணவர்கள் விவசாயத்தை நேரடியாகத் தெரிந்து கொள்ள, புதிய திட்டம் ஒன்றை கோவையிலுள்ள விவசாயப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் “ஒரு விவசாயக் குடும்பம் – ஒரு மாணவர்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒவ்வொருவரும் ஒரு விவசாயக் குடும்பத்துடன் இணைக்கப்படுவார்.
அந்த விவசாயக் குடும்பத்தின் மூலம், அந்த மாணவர் புத்தகப் படிப்பைத் தாண்டி, கிராமங்களில் எப்படி விவசாயம் செய்கிறார்கள் என்பதை நேரடியாக அறிந்து கொள்ள முடியும். விதை விதைத்தல், அறுவடை, நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், விவசாயக் கருவிகள் பயன்பாடு என விவசாயம் தொடர்பான ஒவ்வொன்றையும் வெறும் புத்தகத்தில் படிப்பதோடு நிறுத்தாமல், நேரடியாக மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு இந்தப் புதிய திட்டத்தின் மூலம் ஏற்படும் என விவசாயப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் விதைத்தல், உரமிடுதல், நீர்ப்பாசனம் போன்றவற்றில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள், பயிர்களுக்கு ஏற்படும் நோய்கள், காலநிலை மாறுபாட்டால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளை விவசாயப் பல்கலைக்கழகத்தில் உள்ள விவசாய விஞ்ஞானிகள் அறிந்து கொள்ள முடியும்.
அதன் மூலம், அவர்கள் அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஆய்வு நடவடிக்கையில் இறங்க முடியும். பின்னர் தங்களின் ஆய்வின் அடிப்படையில், அவர்களால் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க முடியும். இந்தப் புதிய திட்டத்தின் மூலம், முதலாம் ஆண்டு படிக்கும் 2,395 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என விவசாயப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கிறது.