விண்வெளிக்கு பயணிக்கும் சென்னை வீரர்… வரலாற்றில் இடம்பிடிக்கப் போகும் அஜித் கிருஷ்ணன்!

‘ககன்யான்’ திட்டம் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 இந்திய வீரர்களின் பட்டியலில், சென்னையைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் இடம்பெற்றுள்ள நிலையில், ‘ககன்யான்’ திட்டம் மற்றும் இக்குழுவைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி, அஜித் கிருஷ்ணனின் பின்னணி உள்ளிட்ட தகவல்களை இங்கே விரிவாக பார்க்கலாம்…
இஸ்ரோவின் ககன்யான் திட்டம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர்கள் 3 நாட்கள் சோதனை நடத்தி, பின்னர் பத்திரமாக பூமிக்கு திரும்பி வருவார்கள். இந்த திட்டத்திற்காக ரூ.9,023 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில், பல கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக விண்வெளிக்கு செல்லும் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் பயிற்சி
முதலில், இந்திய விமானப்படை மற்றும் இஸ்ரோ இணைந்து 12 பேரை தேர்வு செய்து பல கட்ட சோதனைக்கு உட்படுத்தி, அவர்களில் இருந்து 4 பேரை தேர்வு செய்தது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இவர்கள் 4 பேரும் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பயிற்சியை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய அவர்கள், தற்போது பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

விண்வெளிக்கு பயணிக்கும் 4 பேர் யார் யார்?
இந்த நிலையில், ககன்யான் திட்டம் மூலம் முதல் முறையாக விண்வெளிக்கு செல்ல உள்ள 4 வீரர்களின் பெயர், விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 4 பேரின் பெயர்களையும் பிரதமர் மோடி வெளியிட்டு, அவர்களை அறிமுகம் செய்து வைத்ததோடு, அவர்களுக்கு மிஷன் லோகோ பேட்ஜ்களையும் வழங்கினார்.
இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களான பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கித் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த பிரசாந்த் கிருஷ்ணன் நாயர் தான் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார்.

சென்னை வீரர் அஜித் கிருஷ்ணன் பின்னணி…
இவர்களில் அஜித் கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவர், கடந்த 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பட்டம் பெற்ற அஜித் கிருஷ்ணன், விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் (Sword of Honor) ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
2003 ஆம் ஆண்டு ஜூன் 21 ல் இந்திய விமானப்படையின் போர்ப்பிரிவில் நியமிக்கப்பட்ட அஜித் கிருஷ்ணன், பயிற்சி விமானிகளுக்கான ஆலோசகராகவும் உள்ளார். அதோடு இந்திய விமானப்படையின் புதிய விமானத்திற்கான சோதனை பைலட்டாகவும் இருக்கிறார்.

வெலிங்டனில் உள்ள டிஃபென்ஸ் ஸ்டாப் சர்வீர்சஸ் கல்லூரியில் (டி.எஸ்.எஸ்.சி.) அஜித் கிருஷ்ணன் பயிற்சி பெற்றுள்ளார். இவர் 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். சுகோய்-30 எம்.கே.ஐ., மிக்-21, மிக்-29, ஜேகுவார், டார்னியர், ஏ.என்.-32 உள்ளிட்ட
பல்வேறு விமானங்களை இயக்கிய அனுபவமும் இவருக்கு உள்ளது.
விண்வெளிக்கு பயணிக்கும் 4 இந்திய வீரர்களும் தங்களது பயணத்தை வெற்றிகரமாக முடித்து, வரலாற்றில் இடம்பிடிக்க வாழ்த்துவோம்!