விடைபெற்றார் விஜயகாந்த்… 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை… முதலமைச்சரும் பங்கேற்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், திரையுலகத்தினரும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்ற நிலையில், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் கண்ணீருடன் விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த்.

நேற்று காலமான விஜயகாந்தின் உடல், இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்கள், அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, தீவுத்திடலுக்கு இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இன்று காலை முதல் தீவுத்திடலுக்கு வந்து விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது 2 மகன்களுக்கும் ஆறுதல் கூறினர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இன்னொரு பக்கம் பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களும் கண்ணீர்விட்டு கதறியபடியே வரிசையில் நின்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம்

இந்த நிலையில், பிற்பகல் 2.15 மணிக்கு தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில், ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் அவரது உடலை சுமந்து வரும் வாகனத்தின் பின்னால் ‘கேப்டன்… கேப்டன்’ என கண்ணீர்விட்டு கதறியபடியே பின் தொடர்ந்து வருவது காண்போரை கண்கலங்க வைப்பதாக இருந்தது. மேலும் திரையுலகைச் சேர்ந்தவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாகனங்களில் பின் தொடர்ந்தனர்.

வழிநெடுக வீடுகள் மற்றும் கடைவீதிகளில் திரண்டிருந்த மக்கள், வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலை நோக்கி கைகூப்பி வணங்கியபடியே அவருக்கு மரியாதை செலுத்தினர். அவர்களைப் பார்த்து விஜயகாந்தின் மகன்கள் இருவரும் கண்ணீர் மல்க கைகூப்பி வணங்கினர்.

தேமுதிக அலுவலக வளாகத்தில் அடக்கம்

மாலை சுமார் 5.30 மணிக்கு மேல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் கொண்டு செல்லப்பட்டது. வாகனத்தில் வந்த அவரது உடலைப் பார்த்து, அங்கு திரண்டிருந்த அவரது ரசிகர்களும், கட்சியினரும் மற்றும் பொதுமக்களும் ‘கேப்டன்… கேப்டன்’ என குரலெழுப்பி கதறி அழுதனர்.

முதலமைச்சர் இறுதி அஞ்சலி

இந்த நிலையில், விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றே நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தபோதிலும், இன்றும் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வந்து, விஜயகாந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்.பி டி.ஆர் பாலு உள்ளிட்டோரும் வந்திருந்தனர். அதேபோன்று அதிமுக தரப்பிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வந்திருந்தார்.

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

இத்தகைய நிலையில், இறுதிச் சடங்கு தொடங்கியதும் ஏற்கெனவே அறிவித்தபடி காவலர்களின் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க, விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது விஜயகாந்த் குடும்பத்தினரும், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும் கண்கலங்கினர்.

அரசு மரியாதையைத் தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினரின் வழக்கபடி இறுதிச் சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றன. விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், விஜயகாந்த் உடலைச் சுற்றி வந்து வணங்கி, சடங்குகளைச் செய்தனர்.

சடங்குகள் முடிவடைந்ததும், விஜயகாந்த் உடல், அருகில் தோண்டப்பட்டிருந்த குழியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Lc353 ve thermische maaier. Je resterais fidèle à ecoboisconfort par patrice h.