தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், சென்னை தீவுத் திடலில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்தி வரும் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீரால் தீவுத்திடல் கண்ணீர் கடலில் மிதக்கிறது.
நேற்று காலமான விஜயகாந்தின் உடல், இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்கள், அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், வடபழனி தொடங்கி திருமங்கலம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோன்று பூந்தமல்லி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவானது.
தீவுத்திடலுக்கு மாற்ற முடிவு
மேலும், அஞ்சலி செலுத்த வந்த முக்கிய பிரமுகர்களும் திரைப்பிரபலங்களும் எளிதில் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கூடவே ரசிகர்களும் பொதுமக்களுமே கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். இன்றும் வெளியூர்களிலிருந்து அதிகம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், அஞ்சலி செலுத்தும் இடத்தை மாற்ற முடிவானது. இது குறித்து அரசு தரப்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது உடலை தீவுத் திடலுக்கு கொண்டு செல்ல நேற்று மாலை முடிவானது. இது குறித்து விஜயகாந்த் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்மதித்த நிலையில், விஜயகாந்தின் உடல் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் தீவுத்திடலில் வைக்கப்படும் என்று தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியானது.
இரவோடு இரவாக ஏற்பாடுகள்
இந்த நிலையில், தீவுத்திடலில் இரவோடு இரவாக அரசு தரப்பில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த ஏதுவாக மேடை மீது அவரது உடல் சாய்வாக வைக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கு ஏதுவாக மேடையின் இடது புறம் இருக்கைகள் அமைக்கப்பட்டன.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதுவதற்கு ஏதுவாக சுமார் 100 மீட்டர் அளவிற்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு அதில் 2000 இருக்கைகள் போடப்பட்டன. பத்திரிகையாளர்களுக்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டது. அஞ்சலி செலுத்த வருபவர்கள் நெரிசலில் சிக்காமல் எளிதாக சென்று வர ஏதுவாக 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் பகுதியில் குடிதண்ணீர், கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணியளவில், விஜயகாந்தின் உடல் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் இருந்து தீவுத் திடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அஞ்சலி செலுத்த வருபவர்கள் தீவுத்திடலை நோக்கி குவியத் தொடங்கினர். மேலும், கோயம்பேட்டில் நேற்று காணப்பட்ட நெரிசலால் வரமுடியாமல் போனவர்களும், வெளியூர்களில் ஷூட்டிங்கில் சிக்கிக் கொண்ட திரைப்பிரபலங்களும் இன்று காலை முதல் தீவுத்திடலுக்கு வந்து விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது 2 மகன்களுக்கும் ஆறுதல் கூறினர்.
ரஜினிகாந்த் அஞ்சலி
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி ராதாரவி, வாகை சந்திரசேகர், இயக்குநர் ரமேஷ் கண்ணா, இசையமைப்பாளர் தேவா, அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா, நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு, இயக்குநர் சுந்தர்.சி, அவரது மனைவி நடிகை குஷ்பு, நடிகர் ராம்கி, விஜய் ஆண்டனி, அருள்நிதி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து கேப்டனுக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவர்கள் அனைவருமே, விஜயகாந்தின் உதவும் உள்ளத்தையும், தனது வீட்டுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் தேடி வருபவர்களை சாப்பிட வைத்து அனுப்பியதையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து பேசினர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜயகாந்தின் மறைவு மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. ஒரு முறை பழகினால் விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். விஜயகாந்த் கோபத்துக்குப் பின்னால் நியாயமான ஒரு காரணம் இருக்கும். விஜயகாந்த் தைரியத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமானவர். விஜயகாந்த் நட்புக்கு இலக்கணமானவர், சுயநலமில்லாதவர். விஜயகாந்தின் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி; மக்களின் மனதில் நிற்பவர் யார்? விஜயகாந்த் போன்றோர்தான்” என தெரிவித்தார்.
கண்ணீர் கடலில் தீவுத்திடல்
அதேபோன்று தமிழக அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்களும் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இன்னொரு பக்கம் பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களும் கண்ணீர்விட்டு கதறியபடியே வரிசையில் நின்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழையைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களில் பலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அங்கேயே நின்று கதறி அழுத நிலையில், அவர்களை அங்கிருந்து அனுப்புவது மிகவும் சிரமமாக இருந்தது. சுருக்கமாக சொல்வதென்றால் தீவுத்திடல், ரசிகர்களின் கண்ணீர் கடலில் மிதந்தது என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், இன்று மதியம் தீவுத் திடலிலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படும் விஜயகாந்த் உடல், மாலை 4.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.