Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

வாழை இலையில் உணவு சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?

வாழை இலையில் உணவு சாப்பிட்டாலே நாம் ஏதோ திருமண நிகழ்விலோ  அல்லது இன்ன பிற நிகழ்விலோதான் இருக்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு வாழை இலையின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

அதற்குப் பதிலாக நெகிழியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சில நிகழ்வுகளில் தற்போது நெகிழி இலைகளிலேயே உணவு பரிமாறும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது.

ஆனால், ‘வாழை இலை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது’ என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “வாழை இலையில் உணவு சாப்பிட்டால் தேகத்திற்குப் பொலிவு கிடைக்கும். முகத்திற்குப் பொலிவு ஏற்படுத்த, விலை உயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்துவதை விட, தொடர்ந்து வாழை இலையில் உணவு சாப்பிட்டால் தேகம் பொலிவு பெறும்.

நல்ல வியர்வை சுரக்க வைக்கக் கூடிய தன்மை வாழை இலைக்கு இருக்கிறது. அதனால் நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேற இது உதவி செய்கிறது.

மேலும் இதற்கு குளிர்ச்சி தன்மை இருப்பதால் பித்தம் சார்ந்த நோய்கள் சரியாகும்.

செரிமான பிரச்னை இருப்பவர்கள் வாழை இலையில் சாப்பிட்டால் நல்லது. பொதுவாகவே வாசனைக்கும், செரிமானத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் சூடான உணவை வாழை இலையில் போட்டு அந்த வாசனையுடன் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்னை சரியாகும்.

வாழை இலையில் சாப்பிடும்போது நாம் கீழே அமர்ந்து, சம்மணம் இட்டுதான் சாப்பிடுவோம். சம்மணம் இடுவதால் ஏற்படும் அனைத்து பயன்களும் நமக்கு அப்போது கிடைக்கும்.

வாழை இலையில் சாப்பிட்டால், நெகிழிக் காகிதம், நெகிழி தட்டுகளில் சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் விடுபடலாம்” என்கிறார்.  

Exit mobile version