மக்களை பயமுறுத்தும் நோக்கத்திலோ அல்லது வேறு ஏதோ ஒரு தேவைக்காகவோ சிலர் பொய்யான தகவல்களை வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பிவிடுகிறார்கள். அதுவே பல கட்டங்களைத் தாண்டி நமக்கே வந்து சேரும். நமது நண்பர்கள்… ஏன் நமது பெற்றோர்கள் கூட அந்த செய்தியை நம்மிடம் தெரிவித்து எச்சரிக்கை செய்வார்கள்.
இது பொய் செய்தி அல்லது வதந்தி என அவர்களுக்கு நாமும் விளக்காமல் போனால், அவர்களும் அந்த வதந்தியை உண்மை என நம்பிக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு நபரை பற்றியோ அல்லது அரசியல், ஜாதி, மத உணர்வைத் தூண்டும் வகையிலோ அதிகமான பொய் செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் ஒரு செய்தி பொய்யா அல்லது உண்மையா என அவர்களுக்கு நாம் எப்படி புரிய வைக்க முடியும்? அது என்ன அவ்வளவு பெரிய வேலையா என்ன? நம் வாட்ஸ் அப்பில் ஒரு பொய் செய்தியைப் பார்த்தவுடனேயே, அது பொய் செய்தி எனத் தெரியப்படுத்துங்கள்… குறிப்பாக 30 முதல் 60 வயதுடைய நபர்கள், பொய் செய்தி குறித்த விழிப்புணர்வு இல்லாமலே, அதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.
காவல்துறை பெயரில் பொய்ச் செய்தி
அதேபோன்று தான் கடந்த இரண்டு நாட்களாக ஒரு பொய்ச் செய்தி தமிழ்நாட்டில் படுவேகமாக பரவி வருகிறது. அதில் தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பதை போல ஒரு புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில், ‘கொள்ளையர்கள் பயன்படுத்தும் புது யுக்தி… ஜாக்கிரதையாக பொதுமக்கள் இருக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் நீங்கள் தெளிவாக கவனித்தால் தெரியும், அதில் எவ்வளவு எழுத்துப் பிழை உள்ளது என்பது. ‘வெளியே’ என்பதற்குப் பதிலாக ‘வெலியே’ எனவும் நள்ளிரவுக்கு ‘நள்ள்ரிரவு’ என்றும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு காவல்துறை இப்படி செய்தியை வெளியிட்டு இருந்தால், அதில் தமிழ் எழுத்துகள் இவ்வளவு பிழையாகவா இருக்கும்? மேலும் இது ‘வதந்தீ செய்தி’ என தமிழ்நாடு காவல்துறை, தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, அது பொய் செய்தி என விளக்கம் அளித்துள்ளது.
கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த நிலையில் உங்களுக்கு பரப்பப்படும் இத்தகைய தகவல்களை வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ஷேர் மற்றும் ஃபார்வேர்ட்(forward) செய்யாதீர்கள். அப்படி ஷேர் செய்தே ஆகவேண்டும் எனில், அதை கண்டு பிடிக்க சில வழிகளை பின்பற்ற வேண்டும். Google-ஐ ஓபன் செய்து, அதில் நீங்கள் பார்த்த குறிப்பிட்ட இமேஜ் அல்லது வீடியோவை டவுன்லோட் செய்து, google chrome ஆப்பில் உள்ள சர்ச் பாக்ஸில் ‘இமேஜ் search’செய்து பாருங்கள்.
ஒரு வேளை அந்த விஷயம் உண்மை எனில், அது பல நம்பும் படியான செய்தி இணைய தளங்களில் வெளியிடப்பட்டு இருக்கும். அப்படி இல்லாவிடில் அது பொய்யான செய்தி. எனவே அதனை, உடனே delete செய்து விடவும். நீங்கள் பார்த்த எந்த விஷயத்தையும் உங்களால் உறுதிபடுத்த முடியாதபோது அதை மற்றவர்களுக்கு பகிர்வதை தவிர்க்கவும்.
மேலும், நீங்கள் பார்த்த வீடியோ அல்லது இமேஜ் போலி எனத் தெரிந்தால் உடனே அந்த வீடியோ அல்லது இமேஜ் குறித்து ரிப்போர்ட் செய்யுங்கள். வாட்ஸ் அப் போலி நியூஸை, ccaddn-dot@nic.in என்ற இந்திய அரசாங்கத்தின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பியும், நடவடிக்கை எடுக்க கோரலாம்!