வாசிப்பை நேசிப்பவர்களுக்கான திருவிழா… சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான ‘பபாசி’யின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், சென்னை புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் காட்சி நடைபெறுகிறது என்றாலும், சென்னை புத்தகக் காட்சிக்கு மட்டும் எப்போதும் வாசகர்களிடம் தனி ஈர்ப்பு உண்டு.
அதேபோன்று எழுத்தாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்குமே இதில் கலந்துகொள்வது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதால், அவர்களும் விருப்பத்துடன் வருகை தருவார்கள். இவையெல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கூட வாசகர்கள் வருவது உண்டு என்பதால், சென்னை புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை அது வாசிப்பை நேசிப்பவர்களுக்கான திருவிழாவாகவே கொண்டாடப்படும்.
இதனால், சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புத்தகக் காட்சிக்கும் லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிந்து ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான புத்தகக் காட்சி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் இன்று தொடங்கியது. இதை , விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, கலைஞர் பொற்கிழி மற்றும் பபாசி விருதுகளை வழங்கினார்.
யார் யாருக்கு விருதுகள்?
உரைநடைக்காக சிவசுப்பிரமணியன், கவிதைக்காக உமா மகேசுவரி, நாவலுக்காக தமிழ்மகன், சிறுகதைக்காக அழகிய பெரியவன், நாடகத்துக்காக வேலு சரவணன், மொழிபெயர்ப்புக்காக மயிலை பாலு ஆகியோருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல், சிறந்த பதிப்பாளருக்கான விருதுக்கு அனுஷ், சிறந்த நுாலகருக்காக ஆசைத்தம்பி, சிறந்த புத்தக விற்பனையாளருக்காக கிரி டிரேடிங் கம்பெனி, சிறந்த குழந்தை எழுத்தாளருக்காக சி.எஸ்தேவநாதன் ஆகியோருக்கு பபாசி விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த தமிழறிஞருக்காக குழ.கதிரேசன், சிறந்த பெண்எழுத்தாளருக்காக இன்பா அலோசியஸ், சிறந்த சிறுவர் அறிவியல் நுாலுக்காக வேலைய்யன், கவிதை இலக்கியத்துக்காக, இலக்கிய நடராஜன், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்காக கமலநாதன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
900 அரங்குகள்… லட்சக்கணக்கான புத்தகங்கள்
ஜனவரி 21 ஆம் தேதி வரை 19 நாள்கள் நடைபெற உள்ள இந்த புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சி நடக்கிறது. தினமும் மாலையில் ‘சிந்தனை அரங்கம்’ என்ற நிகழ்ச்சியில், அறிஞர்கள், எழுத்தாளர்கள் பேசுவர்.
10 சதவீதம் தள்ளுபடி
அரசு துறை பதிப்பகங்கள், உலகப்புகழ்பெற்ற ஆங்கில பதிப்பகங்கள், சிங்கப்பூர் பதிப்பகங்கள் உள்ளிட்டவையும் அரங்கு அமைத்துள்ள நிலையில், அனைத்து நூல்களும் 10 சதவீதம் தள்ளுபடியில் விற்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி, பூம்புகார் நிறுவனத்தின் கை வினைப்பொருள் கண்காட்சி அரங்கும் இடம் பெற்றுள்ளது. மேலும் குடிநீர், கழிப்பிட வசதிகள், உணவு ஸ்டால்களும் தனியான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள், நாவல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள், ஆங்கில புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் என இந்தப் புத்தகக் காட்சி, புத்தக பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும்!
முதலமைச்சரின் உரை…
முன்னதாக, இந்த புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், “தவிர்க்க இயலாத காரணங்களால் கண்காட்சியைத் தொடங்கி வைக்க இயலாததற்கு வருந்துகிறேன்” என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அந்த உரையை, புத்தகக் காட்சியைத் திறந்து வைத்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசிக்கையில் இது தெரியவந்தது.
மேலும் முதலமைச்சர் தனது உரையில், “சென்னையில் நடைபெறும் 47-வது புத்தக கண்காட்சி பெரும் வெற்றி அடையட்டும்.கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருதுகள் பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்த்க மையத்தில் ரூ.6 கோடி செலவில் பன்னாட்டு புத்தகக் காட்சி வருகிற 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது” என்று தெரிவித்திருந்தார்.