வாக்காளர் பட்டியல்… அப்புறம் வருத்தப்படாதீங்க!
தமிழ்நாட்டில் அரசியல் குறித்த கார சார விவாதங்களுக்கும் உரையாடல்களுக்கும் எப்போதும் பஞ்சமே கிடையாது. ‘ஜனநாயகம், ஜனநாயக கடமை’ என்று பலர் உரக்கப் பேசுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அப்படிப் பேசுபவர்களில் பலர் வாக்காளர் அட்டையைப் பெறுவதிலும், அதை அப்டேட்டாக வைத்திருப்பதிலும் அந்த அளவுக்கு அக்கறையாக இருக்கிறார்களா என்றால், கிடைக்கும் பதில் என்னவோ நம்மை வருத்தமடைய வைப்பதாகத்தான் இருக்கும்!
இதனால், ஜனநாயக கடமையைப் பற்றி நீட்டி முழக்கி பேசுபவர்களில் கணிசமானோர், ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் இருப்பார்கள் அல்லது அவர்களின் கவனக்குறைவால் ஓட்டுப்போட முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
ஆனால், அப்படியெல்லாம் நாம் இல்லாமல் தேர்தல் வருவதற்கு முன்னரே வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை சரி பார்த்து, மாற்றங்கள் இருந்தாலும் அதனை உரிய காலக்கெடுவுக்குள்ளேயே செய்து முடிக்க வேண்டும்.
அந்த வகையில் நமக்கு உதவுவதற்காக தான், வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார். மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கவோ, நீக்கம் செய்யவோ அல்லது வேறு மாற்றங்கள் செய்யவேண்டும் என்றாலோ இன்று (27-10-2023) முதல் 19-12-2023 ஆம் தேதி வரை அதற்கான படிவங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் 6,11,31,197 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், பெண் வாக்காளர்கள் 3,10,54,571 கோடி பேர். ஆண் வாக்காளர்கள் 3,00,68,610 கோடி பேர். திருநர் சமூகத்தினர் 8016 பேர்.
அதிகபட்சம் சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சம் கீழ்வேளூர் பகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் 18-19 வயதுடைய வாக்காளர்கள் 3.94 லட்சம் பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 2.18 லட்சம் பேரும், பெண்கள் 1.75 லட்சம் பேரும் உள்ளனர்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் நம் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து, ஏதாவது மாற்றம் இருப்பின் அதனை குறிப்பிட்ட தேதிக்குள் செய்துவிட்டால், வாக்குப்பதிவு தினத்தன்று ” ஐயோ… என் பெயரைக் காணோமே… வாக்குச்சாவடி எங்கே இருக்குன்னே தெரியலையே…”ன்னாலாம் வருத்தப்பட வேண்டிய நிலைமை வராது மக்களே..!