Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

‘வரையாடு’: தமிழ்நாட்டின் பொக்கிஷத்தைப் பாதுகாக்க ரூ.25 கோடி!

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்று பாடினார் பாரதி.

மனித இனம் செழித்து வளர வேண்டுமென்றால், தன்னைச்சுற்றியுள்ள இயற்கையையும் அது பாதுகாத்தாக வேண்டும். இயற்கை படைத்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு தேவை இருக்கிறது. ஒவ்வொரு உயிரினமும் தாவரமும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது. அதனால்தான் அழியக் கூடிய உயிரினங்களையும் கூட அழியாமல் பாதுகாக்க வேண்டும் என நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உயிரினம் ‘வரையாடு’. அது அழியக்கூடிய இனங்களின் பட்டியலில் இருக்கிறது. இந்த வரையாடு, மலை உச்சிகளில் மட்டுமே வாழக் கூடியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான இனம் இந்த வரையாடு. இந்தியாவின் பிற பகுதிகளில் காட்டுப் பகுதிகளில் வாழும் ஆடுகள் ‘காட்டாடு’ எனப்படுகின்றன. ‘நீலகிரி வரையாடு’ அந்தக் காட்டாடுகளை விட சற்றுப் பெரியதாக இருக்கும். வரை என்றால் மலை உச்சி என்று பொருள். மலை உச்சியில் வசிக்கும் ஆடு என்பதால் இதற்கு ‘வரையாடு’ என்று பெயர் வந்தது. வரையாடுகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு.

ஆண் ஆடுகள் தனிக் கூட்டமாகவும் பெண் ஆடுகள் தனிக் கூட்டமாகவும் வாழும். ஜூனில் இருந்து ஆகஸ்ட்டு வரை ஆடுகளுக்கான இனப்பெருக்க கால கட்டம். அப்போது மட்டுமே ஆண் ஆடுகள் பெண் ஆடுகளோடு சேரும். வரையாடுகள் வெப்பமான பகல் வேளைகளில் செங்குத்தான பாறை இடுக்குகளில் ஓய்வெடுக்கும். சிறுத்தை, செந்நாய், புலி ஆகியவை வரையாடுகளின் எதிரிகள். வரையாடுகள் ஓய்வெடுக்கும் போது கூட்டமாகவே ஓய்வெடுக்கும். அந்த கூட்டத்தில் இருந்து ஒரு ஆடு அது பெரும்பாலும் பெண்ணாகவே இருக்கும். உயரமான இடத்தில் இருந்து காவல்காக்கும். மிகத் தொலைவில் எதிரிகள் வந்தாலும் கண்டு பிடித்து விடும். சிறுத்தையோ செந்நாயோ வருவது தெரிந்தால் உடனடியாக ஒரு ஒலி எழுப்பி தனது கூட்டத்தை எச்சரிக்கும்.

வரையாடுகள் 2500ல் இருந்து 3000 என்ற அளவில்தான் இருக்கும் என்று கணிக்கிறார்கள். அவற்றைப் பாதுகாக்க இப்போது தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளது. அந்தத் திட்டத்திற்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆம். தமிழ்நாட்டின் பொக்கிஷத்தைப் பாதுகாக்க ரூ.25 கோடி.

Exit mobile version