வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், 11 துறைகளை உள்ளடக்கி 4181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கான இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘வட சென்னை வளர்ச்சி திட்டம்’ முடிவுறுகிறபோது, வட சென்னையின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை திமுக எழுதியிருக்கும் என்றும், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மாநகரத்தை நவீனமாக்கியதில் பெரும் பங்கு திமுக-வுக்கு உண்டு என்றும் குறிப்பிட்டதோடு, சென்னை மாநகரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் தாம் தான் என்ற பெருமை தனக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.
‘துயரில் துணை நிற்கும் திமுக‘
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “இன்றைய சென்னையில் நீங்கள் பார்க்கிற எல்லா வளர்ச்சி பணிகளுமே திமுக உருவாக்கியதுதான். நம்மை பொறுத்தவரை துயர் வரும் நேரம் துணை நிற்பது மட்டுமல்ல; துயர் துடைக்கும் திட்டங்களையும் உருவாக்கி வருகிறோம். சென்னையின் அனைத்துப் பகுதிகளும் ஒரு சேர வளர வேண்டும் என்று நினைக்கும் நாம் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இப்பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, இடப்பற்றாக்குறை, மக்கள் நெரிசல், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த திட்டத்தை வட சென்னை பகுதிக்கு மட்டும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறோம்.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதியன்று அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்தோம். இந்த திட்டத்தை அறிவித்த போது ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் அமைக்கப்படும் என்று தான் சொன்னோம். ஆனால் இன்று நான்கு மடங்கு தொகையை உயர்த்தி வழங்கி இருக்கிறோம். 4 ஆயிரத்து 181 கோடி மதிப்பில், 11 அரசுத் துறைகளுடன் இணைந்து வட சென்னை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவித்த அவர், அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை பட்டியலிட்டார்.
வடசென்னைக்கான முக்கிய வளர்ச்சித் திட்டங்கள்
மாதிரிப்பள்ளிகளை உருவாக்குதல், குறைந்த விலையில் வீட்டுவசதி, திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குதல், புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை நிர்மாணித்தல் மற்றும் மேம்படுத்துதல்.
முக்கியமான பகுதிகளில் துணை மின் நிலையங்களை நிறுவுதல், போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வுமையம் நிறுவுதல், பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பொதுமக்களின்பாதுகாப்பை மேம்படுத்துதல், மருத்துவ சுகாதாரநிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள்நலனுக்கான உயர்சிறப்புப் பிரிவு கட்டுதல். குடிநீர்வழங்குதல்.
இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள், பொதுப் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சந்தைகள், டோபி-கானா எனும் சலவை செய்யுமிடம் மற்றும் டயாலிசிஸ் மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் வடசென்னை முழுவதும் முக்கியமான இடங்களில் நிறுவி மேம்படுத்தப்படும்.
ரூபாய் 640 கோடி செலவில் கொடுங்கையூரில் உயிரி சுரங்கத்திட்டம் (Bio Mining Project), ரூபாய் 238 கோடி செலவில் இரண்டு பெரிய பாலங்கள், ரூபாய் 80 கோடியில் தணிகாசலம் கால்வாய் புனரமைப்புத் திட்டம் போன்ற பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களும் அமைக்கப்படும்.
ரூபாய் 823 கோடி செலவில் பிராட்வே பேருந்துமுனைய மறுகட்டுமான பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, பயன்பாட்டிற்குகொண்டு வரப்படும்.