Amazing Tamilnadu – Tamil News Updates

ரூ. 6 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு; 26,90,000 பேருக்கு வேலை வாய்ப்பு: முதலமைச்சர் பெருமிதம்!

லக முதலீட்டாளர் மாநாட்டில், 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது என்றும், அதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அவர், உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்பு “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் நடத்தப்பட்ட மாநாடுகள் மூலமாக, ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரையில், 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை பெற்றிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாகவும்
27 தொழிற்சாலைகளைத் திறந்து வைத்திருப்பதாகவும், அதன் மூலம் 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது நடைபெற்றுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் ஈர்க்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார். இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

உற்பத்தித் துறையில், 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய், எரிசக்தித் துறையில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி ரூபாய், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் 62 ஆயிரத்து 939 கோடி ரூபாய், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் 22 ஆயிரத்து 130 கோடி ரூபாய், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் 63 ஆயிரத்து 573 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். 2030-ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாடு ஒன் ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கின்ற மாநிலமாகவும் சிறந்திட, பெரும் இலட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருவதாகவும், அந்த இலக்கை விரைவில் அடைந்திட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறினார்.

முதலீடுகளை ஈர்க்க, தனியார் மற்றும் அரசுத் துறைகளை இணைத்து பொது-தனியார் கூட்டாண்மைக் கொள்கையும் (Public – Private Partnership Policy) வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு உருவாக்கியுள்ள டேன்-ஃபண்ட் மூலம், பன்னாட்டுத் துணிகர முதலீட்டு நிறுவனங்களை (Venture Funds), தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களோடு இணைப்பதற்கான தளம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ஏற்கனவே, ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக விளங்குகின்ற தமிழ்நாடு, தன்னுடைய போட்டித்திறனை அதிகரிக்க முடியும். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கான விற்பனையாளர் – வாங்குவோர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டில், ஒன்பது பங்காளர் நாடுகள் பன்னாட்டு அரங்கம் அமைத்து, இந்த மாநிலத்தின் மீது தங்களின் ஆழமான மற்றும் நீண்டகால ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்கள்.

மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மூலமும், “நான் முதல்வன்” திட்டம் மூலமும் மாணவர்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பயனடைய வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தது. சுமார் இருபதாயிரம் பிரதிநிதிகள் மற்றும் 39 லட்சம் மாணவர்கள், இதில் கலந்துகொண்டு பயனடைந்துள்ளார்கள் என்று மாநாட்டின் சிறப்பம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்.

Exit mobile version