உலக முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி, தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் 16 ஆயிரம் கோடி ரூபாயில் மின்சார கார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க இருக்கிறது. இதன் மூலம் 3 ஆயிரம் பேரில் இருந்து 3 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் அமைய உள்ள மின்வாகன தொழிற்சாலையின் மூலம் முதல்தரமான மின்வாகன மையமாக தமிழகத்தை மாற்ற வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது.
தொழிற்சாலை அமைக்கும் பணி இந்த ஆண்டில் தொடங்க இருக்கிறது. இந்தத் தொழிற்சாலை இந்திய குறிப்பாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வலிமையான அடித்தளமாக அமைய இருக்கிறது. ஒருபுறம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் அதே சமயத்தில் பசுமைப் போக்குவரத்தை இந்தத் தொழிற்சாலை உறுதிப்படுத்த இருக்கிறது. அடுத்து புதிதாகப் பதிவு செய்யும் கார்களில் 30 சதவீதம் வரையில் எலக்ட்ரிக் கார்களாக இருக்க வேண்டும் என வின்ஃபாஸ்ட் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் எலக்ட்ரிக் கார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது என்றும், இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மனமார்ந்த நன்றிகள்” எனக் கூறியுள்ள அவர், இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.