‘தமிழர்கள் அந்தக் காலத்திலேயே கடல் கடந்து வாணிபம் செய்தனர். கடல் கடந்து சென்று போர் புரிந்தனர்…’ என வரலாற்றில் படித்திருக்கிறோம்.
ராஜேந்திர சோழன் அந்தக் காலத்திலேயே மிகப்பெரிய கப்பல் படையை வைத்திருந்தான். அந்தக் கப்பல் படை இயங்கிய விதத்தை, இப்போது நம்மால் நேரில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.
அந்த ஆசையை நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறது தமிழ் விர்ச்சுவல் அகாடமி.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த அகாடமி, சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது. இந்த அகாடமி, இணையவழியில் தமிழ் கற்றுத் தருகிறது. தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த தகவல்களை வழங்கி வருகிறது. கடல்கடந்து வாழும் மற்றும் உள்ளூரில் வாழும் தமிழர்களின் பயன்பாட்டிற்காக, தமிழ் டிஜிட்டல் நூலகம் ஒன்றையும் நடத்தி வருகிறது
https://www.tamildigitallibrary.in/ மற்றும் http://www.tagavalaatruppadai.in/ என்ற இணையதளங்களில் சென்று நூல்களை எடுத்துப் படிக்கலாம். தமிழ் மொழி மற்றும் பண்பாடு தொடர்பான அரிய புகைப்படங்கள், பழைய கிடைக்காத புத்தகங்கள், அந்தக் காலத்து இதழ்கள், கையெழுத்துப் பிரதிகள் இந்த நூலகங்களில் டிஜிட்டல் வடிவில் கிடைக்கின்றன.
இந்தப் பணிகளோடு தமிழ் விர்ச்சுவல் அகாடமி, விர்ச்சுவல் ரியாலிட்டி மியூசியம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இணையம் மற்றும் மொபைல் தொழில் நுட்பத்தில் அந்த மியூசியத்தை நாம் பார்க்கும் வண்ணம் அதை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியத்தை புத்தகத்தில் படித்திருப்போம். அவற்றை, அந்தக் காலத்து சரித்திரக் காட்சிகளை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருவதுதான் இந்த மியூசியத்தின் நோக்கம். இந்த விர்ச்சுவல் காட்சிகளுக்கு முதல்கட்டமாக ஒரு வரலாற்றுக் காட்சியையும் ஒரு இலக்கியக் காட்சியையும் விர்ச்சுவல் வடிவில் கொண்டு வர தமிழ் விர்ச்சுவல் அகாடமி திட்டமிட்டுள்ளது.
ராஜேந்திர சோழனின் கடற்படை, கடல் கடந்து சென்று போர் புரிந்தது, வாணிகம் செய்தது குறித்த காட்சிகளை விர்ச்சுவலாக காட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதே போல் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள இந்திரவிழா காட்சிகளையும் விர்ச்சுவல் வடிவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் காட்சிகளை வடிவமைக்க விரும்பும் தொழில் நுட்ப நிறுவனங்களை அழைக்கும் டெண்டர் ஒன்றையும் தமிழ் விர்ச்சுவல் அகாடமி வெளியிட்டுள்ளது.
அந்த விபரங்கள் பின்வரும் லிங்க்கில் கிடைக்கின்றன.
https://www.tamilvu.org/sites/default/files/tender/TVARFPv.pdf