சென்னையின் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு வந்த மாமருந்துதான் மெட்ரோ ரயில்.
இந்தியாவிலேயே மிகவும் நீளமான மெட்ரோ ரயில் பாதை வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கிறது சென்னை மெட்ரோ. சென்னையில் உள்ளூர் போக்குவரத்தில் 1931ல் இருந்தே ரயிலுக்கு ஒரு முக்கியமான இடம் உள்ளது. கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையில் ஆரம்பித்தது அந்தப் போக்குவரத்து. அப்போது மீட்டர் கேஜ்தான் இருந்தது. அதன்பிறகு அது அகல ரயில்பாதையாக மாறியது. சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரையில் ஒரு பாதையும் கும்மிடிப்பூண்டி வரையில் ஒரு பாதையும் போடப்பட்டு, அந்தப்பக்கமும் சேவை தொடங்கியது. அதன்பிறகு வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரையில் பறக்கும் ரயில் வந்தது.
அதன் பிறகு வந்ததுதான் அதிவேக மெட்ரோ ரயில். பூமிக்கு அடியிலும் சாலைக்கு மேலேயும் செல்வதால் எந்தவிதமான போக்குவரத்து நெருக்கடியிலும் சிக்காமல் செல்லும் ரயில்.
இப்போது விம்கோ நகரில் இருந்து ஆலந்தூர் வரையிலும் ஆலந்தூரில் இருந்து சென்ட்ரல் வரையிலும் என்று ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த கட்டத்தில் வடசென்னையில் மெட்ரோ ரயில் தொட்டுப்பார்க்காத, பகுதிகளை எல்லாம் தொட இருக்கிறது. மாதாவரத்தில் இருந்து ஆரம்பித்து, பெரம்பூர், பட்டாளம், ஓட்டேரி, புரசைவாக்கம் எல்லாம் சுற்றி சோழிங்கநல்லூர், சத்தியபாமா கல்லூரி என்று பழைய மகாபலிபுரம் சாரை வரையில் நீள்கிறது அதன் பாதை.
இந்த மிகப்பெரிய வேலையில் டாடா நிறுவனமும் தற்போது கைகோர்த்திருக்கிறது.
கொளத்தூர், சீனிவாசா நகர், வில்லிவாக்கம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் எம்டிஎச் சாலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களைக் கட்டும் பணியில் டாடா நிறுவனம் ஈடுபட இருக்கிறது. உள்ளே நுழையும் வாயிலில் ஆரம்பித்து, வெளியேறும் வாயில் வரையில் அத்தனை பணிகளிலும் டாடாவின் கை இருக்கும். இந்த நிலையங்கள் அனைத்துமே பூமிக்கடியில் அமைக்கப்பட உள்ளன என்பது கூடுதல் தகவல்.