மூன்றே கடைகளுடன் இருந்த ரங்கநாதன் தெரு!

தீபாவளிக்கு இன்னும் 12 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், வழக்கம்போலவே இந்த முறையும் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது. ரங்கநாதன் தெரு மட்டுமல்ல; அதையொட்டிய தி.நகர் கடைவீதி அனைத்திலுமே திருவிழா கூட்டம்தான்.

எத்தனை முறை கூட்ட நெரிசலில் சிக்கி, திணறி ஷாப்பிங் செய்தாலும், ரங்கநாதன் தெரு மீதோ அல்லது தி.நகரின் இதர இடங்கள் மீதோ மக்களுக்கு வெறுப்போ சலிப்போ வருவதே இல்லை. பண்டிகை நாட்கள் ஷாப்பிங் இல்லாவிட்டாலும் கூட, சும்மாவாவது விடுமுறை தினங்களிலோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ குடும்பத்திருனருடன் அல்லது நட்பு வட்டங்களுடன் ஒரு ஜாலி விசிட் அடித்துவிடுவது சென்னைவாசிகளின் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்த அளவுக்கு சென்னைவாசிகளின் மனம் கவர்ந்த தியாகராயர் நகர் எனும் தி.நகரும் ரங்கநாதன் தெருவும் தனது பிளாக் அண்ட் ஒயிட் கால வரலாற்றில் பல சுவாரஸ்ய பக்கங்களைக் கடந்து வந்துள்ளது. அதில் சில சுவாரஸ்யங்கள் இங்கே…

மூன்றே கடைகளுடன் இருந்த ரங்கநாதன் தெரு

தொடக்க காலத்தில் ரங்கநாதன் தெருவில் மூன்றே மூன்று கடைகள்தான் இருந்தன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். கும்பகோணம் பாத்திரக்கடை, கல்யாண் ஸ்டோர்ஸ் மற்றும் லிஃப்கோ புக்ஸ் ஷாப் (இப்போது வேறு இடத்துக்கு மாறிவிட்டது) ஆகிய மூன்று கடைகளுடன் ரங்கநாதன் தெரு ஒரு காலத்தில் காட்சியளித்தது.

1970 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ரங்கநாதன் தெரு கொஞ்சம் கொஞ்சமாக முகம் மாறத் தொடங்கியது. அதுவரை ஓட்டு வீடுகளும், தென்னை மரங்களும், மாட்டுத் தொழுவங்களுமாய் இருந்த வீடுகளின் பகுதிகள் எல்லாம் கடைகளுக்காக வாடகைக்கு விடப்பட்டன. வீடுகளின் முதல் மாடியில் வீட்டு உரிமையாளர்கள் வசிக்கத் தொடங்கினர். மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகே ஹோட்டல், மளிகைக் கடை, பாத்திரக் கடை என்று ஒரு கதம்பக் கடைத்தெரு உருமாறத் தொடங்கியது.

இப்போதைய ரங்கநாதன் தெரு

இதுதவிர, தெரு முழுவதும் பிளாட்ஃபாரத்தில் காய்கறிக் கடைகள், பழக்கடைகள் இருந்தன. வெளியூர்களில் இருந்து ரயிலில் காலையில் கொண்டுவரப்படும் காய்கறிகள், விலை மலிவாக ரங்கநாதன் தெருவில் விற்கப்பட்டன. ரயில் நிலையத்தில் இருந்து இறங்கிச் செல்வோர், வேலை முடிந்து ரயில் நிலையத்துக்கு வருவோர்களைக் குறிவைத்துத்தான் ரங்கநாதன் தெருவில் காய்கறிக் கடைகள் முளைத்தன. அப்படித்தான் ரங்கநாதன் தெரு மெல்ல மெல்ல மாறி இன்றைய நெரிசலான நிலைக்கு வந்தது.

வீட்டுக் கதவை தட்டிய நரிகள்

” மாம்பலம் கிராமத்தின் முக்கிய கோவிலாக சிவவிஷ்ணு கோவில் இருந்தது. மாம்பலம் ஸ்டேஷன் அருகே உள்ள வீடுகளின் கதவுகளை நரிகள் நள்ளிரவில் தட்டுவது வழக்கம். ரங்கநாதன் தெருவில் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

1950 கள் மற்றும் 60 களில் நடமாடும் தபால் நிலையங்கள் விமான நிலையத்தை அடைவதற்கு முன் தி.நகர், கடைசி பிக்-அப் பாயின்டாக செயல்பட்டன.

ஊழியர்களுடன் அமைக்கப்பட்ட தபால் நிலையத்தில் ஒரு வேன் மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் நகரின் ஆறு இடங்களுக்குச் சென்று வந்தது. இது இரவு நேர மணியார்டர், எக்ஸ்பிரஸ் டெலிவரி மற்றும் ஸ்பீட் போஸ்ட் போன்ற சேவைகளை வழங்கியது. தபால் முத்திரைகள், தபால் உறைகள் மற்றும் தபால் அட்டைகளும் விற்பனை செய்யப்பட்டன. மக்கள் கடிதங்களை பெட்டியில் போடலாம். அது உடனடியாக எடுக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு அந்தந்த பைகளில் போடப்படும்” என்று நல்லி குப்புசாமி செட்டியார் தான் எழுதிய ‘தியாகராய நகர் அன்றும் இன்றும்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குடிநீர் பஞ்சம்

அதேபோன்று மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன், 1948 ஆம் ஆண்டு வாக்கில் இந்த ரங்கநாதன் தெருவில் வசித்தபோது குடிநீர் பஞ்சம் நிலவியதாக தனது புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“ரங்கநாதன் தெருவில் உள்ள ஒன்பதாம் நம்பர் வீட்டில் நானும், என் குடும்பத்தினரும் வசித்துவந்தோம். அப்போது குடிநீருக்குக் கடும் பஞ்சம் நிலவியது. குடிநீருக்காக அரை கி.மீ தள்ளி இருந்த தாமோதர ரெட்டி தெருவில் இருக்கும் எங்களது உறவினரின் வீட்டுக்குச் சென்று குடிநீர் பிடித்துவருவோம். தாமோதர ரெட்டி தெருவில் இருந்து பார்த்தால், கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில், பிணங்கள் எரியும் புகையைப் பார்க்கலாம். சிலநேரம் பிண வாடையையும் உணரமுடியும். தி.நகரில் இப்போது இருக்கும் சிவா விஷ்ணு கோயில் அப்போது ஒரு கிராமத்துக் கோயில்போல இருந்தது. இந்தக் கோயில் முன்புதான் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். அப்போது 9, 10, 11ஏ, 12 மற்றும் 13 எண்கள் கொண்ட பேருந்துகள் தி.நகரிலிருந்து கிளம்பும். ரயில் செல்லாத பகுதிகளுக்கு மட்டுமே பேருந்துகளில் மக்கள் பயணித்தனர்.

ரங்கநாதன் தெருவில் வசித்தபோது, வீட்டில் இருந்து ரயில் போகும், வரும் சத்தங்கள் கேட்கும். இப்போது பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய குட்டை இருந்தது. அந்தக் குட்டையில் இருந்த தண்ணீரில் நிறைய எருமை மாடுகள் ஊறிக்கொண்டிருக்கும். பிறகு அந்தக் குட்டை தூர்க்கப்பட்டுப் பொதுக்கூட்ட மைதானமாக உபயோகிக்கப்பட்டது” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாநகரும் அதன் வீதிகளும் எப்போதும் படிக்கவும் கேட்கவும் எண்ணற்ற சுவாரஸ்யங்களைக் கொண்டவைதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Product tag honda umk 450 xee. Poêle mixte invicta.