உடன்பிறப்புகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்கும் பிறந்த நாள் பரிசு!
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நாளை ( மார்ச் 1 ) தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, திமுக-வினர் தமிழ்நாடு முழுவதும் பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தனக்கான பிறந்த நாள் பரிசாக உடன்பிறப்புகளிடம் அவர் விடுத்திருக்கும் கோரிக்கை திமுக-வினரை நெகிழச் செய்துள்ளது.
இது தொடர்பாக உடன்பிறப்புகளுக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், “நம்மை வளர்த்தெடுத்த உயிர்நிகர் தலைவராம் கலைஞரின் வழியில்தான் உங்களின் ஒருவனான நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. நாளெல்லாம் திட்டங்கள்; பொழுதெல்லாம் சாதனைகள்; அதனால் பயன்பெறும் மக்களின் வாழ்த்துகள் என அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்போரும், மனச்சாட்சி விழிக்கும்போது மனதிற்குள் பாராட்டும் வகையிலான நல்லாட்சியை வழங்கி வருகிறோம். இத்தகைய திராவிட மாடல் ஆட்சியானது இன்று இந்தியா முழுவதும் கவனிக்கப்படுகிறது.
‘மோடி முகத்தில் தோல்வி பயம்’
இத்தகைய சூழலில், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.வைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.
ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடி அவர்களுக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.
தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு.
‘உறுதியாகும் இந்தியா கூட்டணியின் வெற்றி’
பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ‘இந்தியா’ கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிக் கட்சிகளை பா.ஜ.க. தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது.
பிறந்த நாள் பரிசு
‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ ஒலித்திடும் வகையில் உடன்பிறப்புகளின் களப்பணிகள் வீடு வீடாகத் தொடரட்டும். ‘நாற்பதும் நமதே – நாடும் நமதே’ என்கிற இலக்கினை அடைந்திடும் வகையில் உங்களின் உழைப்பு அமையட்டும். அது இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கட்டும். அதுதான் உடன்பிறப்புகளாகிய நீங்கள் உங்களில் ஒருவனான எனக்கு வழங்கிடும் இனிய பிறந்தநாள் பரிசாகும். தலைவர் கலைஞருக்கு அவரது நூற்றாண்டு விழாவில் நாம் அளிக்கும் உண்மையான பரிசாகும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.