முதல்வரின் மூளை… ஒடிசாவைக் கலக்கும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி!
ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் அம்மாநில அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் செல்வாக்கு மிக்க நபராக கலக்கி வருபவர் தமிழரான வி.கார்த்திகேய பாண்டியன் ஐ.ஏ.எஸ். இவர் தற்போது விருப்ப ஓய்வுபெற்ற நிலையில், அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இது, அம்மாநிலத்தையும் தாண்டி ‘யார் இந்த கார்த்திகேய பாண்டியன்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளதோடு, அது தொடர்பான பல்வேறு யூகங்களையும் கிளப்பி உள்ளது.
இந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த நியமனத்தின் பின்னணி என்ன..? ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இந்த அளவுக்கு கார்த்திகேய பாண்டியனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு என்ன காரணம் என்பது போன்றவற்றை தெரிந்துகொள்வதற்கு முன்னர் கார்த்திகேய பாண்டியன் குறித்த முன்கதை சுருக்கத்தைப் பார்த்துவிடுவோம்…
யார் இந்த கார்த்திகேய பாண்டியன் ஐ.ஏ.எஸ் ?
2019 ஆம் ஆண்டு, மே 31 அன்று, நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக ஒடிசாவின் முதலமைச்சராகப் பதவியேற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது இல்லமான நவீன் நிவாஸில் பட்நாயக் சிரித்தபடியே அமர்ந்திருக்க, அவரது இருக்கைக்குப் பின்னால் வி . கே பாண்டியன் சிரித்தபடியே நிற்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, கவனத்தை ஈர்த்திருந்தன. இவர்தான் ‘பட்நாயக்கின் செல்வாக்கு மிக்க தனிச் செயலாளர் பாண்டியன்’ என்பதே அந்த புகைப்படத்தை பார்த்த பின்னர்தான் அம்மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையானோருக்கு தெரியவந்தது.
அதுவரை பட்நாயக்குடன் அவரது தனிச் செயலாளராக பல ஆண்டுகளாக நெருக்கமாக செயல்பட்டபோதிலும், பாண்டியன் தன்னை பெரிதாக வெளிப்படுத்திக்கொண்டதில்லை. அவர் எப்போதும் ஃபிரேமுக்கு வெளியேதான் இருப்பார். ஆனால் அந்த முறை பட்நாயக்கே அந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்ததால், பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவர்கள் அதை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து தேர்தல் வெற்றிக்காக பட்நாயக்கை வாழ்த்தியிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பட்நாயக் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கும் நிலையில், பாண்டியன் முதலமைச்சர் நவீன் பட்நாயக் சார்பாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் – எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் அவர் சட்டை செய்யவில்லை. ஒரு காலத்தில் கேமரா முன்னர் தலைகாட்ட தயங்கி வெட்கப்பட்டவர், இன்று எந்த ஒரு முக்கிய அரசு நிகழ்ச்சியும் மக்கள் கவனத்துக்கு செல்லாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக தன்னுடன் ஒரு கேமரா பட்டாளத்தையே அழைத்துச் செல்கிறார்.
வேறு எந்த சமூக வலைதளத்திலும் இல்லாமல், இன்ஸ்டாகிராமில் மட்டுமே இயங்கும் இவரை 10 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன், 2000 ஆம் ஆண்டு பேட்ச் IAS அதிகாரி ஆவார். 2002 ஆம் ஆண்டு ஒடிசாவின் கலகண்டி மாவட்டத்தில் சப் கலெக்டராக தனது பணியைத் தொடங்கியவர். எந்தப் பொறுப்பை கொடுத்தாலும் அதில் முதன்மையாக திகழ்வதுதான் வி.கே. பாண்டியனின் சிறப்பம்சமாக கூறப்படுகிறது. பட்நாயக்கின் சொந்த மாவட்டமான மயூர்பஞ்ச் மற்றும் கஞ்சம் போன்ற மாநிலத்தின் பெரிய மாவட்டங்களின் கலெக்டராக முத்திரை பதித்தார். அப்படி தனது திறமையாலும், கடும் உழைப்பாலும் கலெக்டர், ஆணையர், செயலர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்த வி.கே. பாண்டியனின் தனித்துவமான பாணியை அடையாளம் கண்டுகொண்டார் முதல்வர் நவீன் பட்நாயக். இதைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு மே மாதம், அவர் பாண்டியனை தனது தனிச் செயலாளராக நியமித்தார்.
இந்த ஆண்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் பட்நாயக்கை சந்தித்தபோது பாண்டியனும் அதில் முக்கிய நபராக காட்சியளித்தது, அவரது முக்கியத்துவம் என்னவாக உள்ளது என்பதை இந்த உலகுக்கு காட்டியது.
இந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக கிடுகிடு உயரத்தை தொட்டிருக்கும் கார்த்திகேயன் பாண்டியன், திடீரென கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி விருப்ப ஓய்வு பெறுவதாக, ஒன்றிய அரசுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், ஒன்றிய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து பாண்டியனை, “மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி(Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவர்” ஆக நியமிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இப்பதவி கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான பதவி. இனி, இவர் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன் பட்நாயக்கின் மூளை
மற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசு பணிக்குச் செல்வதற்கு ஆர்வம் காட்டுவதைப் போன்று நடந்து கொள்ளாமல், பாண்டியன் தொடர்ந்து பட்நாயக்கின் தனிச் செயலாளர் பதவியில் நீடித்து வந்தார். இதுவும் பட்நாயக்கிற்கு பாண்டியன் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு வாக்கில், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறி, பட்நாயக்கின் முக்கிய ஆலோசகராக திகழ்ந்த பியாரிமோகன் மொஹபத்ராவிற்கும், முதல்வர் மற்றும் பியாரிமோகன் மொஹபத்ராவிற்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், அப்போது பாண்டியனுடன் நவீன் பட்நாயக் லண்டன் சென்றிருந்தார்.
இந்த சூழ்நிலையை சாதகமாக்கிக்கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டார் பியாரிமோகன். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மொஹபத்ராவிற்கு கட்சியில் இருந்த செல்வாக்கு காரணமாக பட்நாயக்கின் கைகளில் இருந்து பிஜேடி நழுவிவிடும் என்று பலர் அஞ்சினார்கள். ஆனால் பட்நாயக் அதனை முறியடித்து ஆருடம் கூறியவர்களைத் திகைக்க வைத்தார். இதற்கு முக்கிய காரணம் மொஹபத்ராவின் ஆலோசகர் பணியை பாண்டியன் எடுத்துக்கொண்டதுதான்.
பிஜு பட்நாயக்குக்கு மக்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருவதற்கும், அவரால் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிரடியாக வியூகங்களை அமைத்து வெற்றி பெற முடிவதற்கும் பின்னணியில் வி.கார்த்திகேய பாண்டியன் என்கிற இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இருந்து வருகிறார். இது குறித்து பேசும் அம்மாநில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “பாண்டியன் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் முக்கிய பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெறுகிறார் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நெருக்கடிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார். நவீன் பட்நாயக்கின் மூளையாக செயல்பட்டு, அவரை மக்களுக்கான தலைவராக பிரபலமாக்கும் சில வெற்றிகரமான திட்டங்கள் பாண்டியனின் சிந்தனையில் உருவானதுதான்” எனப் புகழாரம் சூட்டுகின்றனர்.
அதுமட்டுமல்லாது முன்னணி ஆங்கில ஊடகங்களும், “ஒடிசா ஐஏஎஸ் மாநிலமாக மாறி வருகிறது. பட்நாயக்-பாண்டியன் கூட்டணி, ஆட்சி நிர்வாகத்தின் இலக்கணத்தையே மாற்றி வருகிறது” என்றெல்லாம் புகழ்ந்து எழுதின. இதோ அடுத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்லையொட்டி, ஒடிசா சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர உள்ளது. அதனை கருத்தில் கொண்டே பட்நாயக் ஆலோசனையின் பேரில் பாண்டிய விருப்ப ஓய்வு பெற்றதாகவும், தேர்தலையொட்டி அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பிஜு ஜனதா தளக் கட்சியினர் கூறுகின்றனர். தமிழரான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது பணி திறமையில் இன்னொரு மாநிலத்தில் உச்சம் தொடுவது தமிழ்நாட்டுக்குப் பெருமையான விஷயம் தானே..?!