முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்: முதலமைச்சர் உறுதி!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவோம் என உறுதியளித்தார்.
“எங்களுடைய அரசை பொறுத்தவரைக்கும், நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போடுவதில் இருந்து உங்களுடைய எல்லா செயல்களுக்கும் – அதாவது நீங்கள் உங்கள் தொழிற்சாலையை முழுமையாக கட்டி முடித்து, உற்பத்தியை தொடங்குவதில் இருந்து, அதற்கு பிறகும்கூட, உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்! உங்களுக்கு தேவையான எல்லா க்ளியரன்சும் – சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலமாக, விரைந்து வழங்கப்படும்” என்று முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் உறுதியளித்தார்.
“அதேபோல இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும். அதில் தொழில்துறை அலுவலர்கள், Guidance அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அதை ஒரு முழுமையான தொழிற்சாலையாக மாற்றுவதற்கு, அவர்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள்” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
எந்த நேரத்திலும், ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், தனது அலுவலகத்தை, எப்போது வேண்டுமானாலும் முதலீட்டாளர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறிய முதலமைச்சர், “அதனால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்” என்றார்.
முதலீடுகள் மேற்கொண்டுள்ள எல்லோருக்கும் நன்றி தெரிவித்த அவர், “இதுவரை, இங்கே முதலீடு செய்யாதவர்களும், எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய முன் வர வேண்டும்” என அழைப்பு விடுத்தார். முதலீட்டாளர்களை தொழில்முனைவோராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர்களாக பார்ப்பதாகக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டை உலகுக்கு அறிமுகம் செய்யுங்கள். உலக நாடுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வாருங்கள்” என்றும் கேட்டுக்கொண்டார்.